/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காந்தி ரோடு வியாபாரிகள் மனிதசங்கிலி போராட்டம்
/
காந்தி ரோடு வியாபாரிகள் மனிதசங்கிலி போராட்டம்
ADDED : டிச 17, 2024 12:50 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மிக முக்கிய சாலையாக காந்திரோடு உள்ளது. இங்கு, ஏராளமான பட்டு சேலை கடைகள் மட்டுமல்லாமல், ஜவுளிக்கடைகள், ஹோட்டல், திருமண மண்டபம், வங்கிகள் போன்றவை இயங்கி வருகின்றன.
நகரின் வியாபார மையமாக இப்பகுதி இருப்பதால், எப்போதும் வாகன நெரிசலாக காணப்படும். முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில், பட்டு சேலை வாங்க, வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கார்களில்வருவதால், காந்திரோடு முழுதும் கடும் நெரிசலாககாணப்படும்.
மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து பலகட்ட நடவடிக்கை எடுத்தபோதும், கடந்த ஆண்டுகளில் அவை தோல்வியடைந்தன. இந்நிலையில், காந்திரோட்டின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, நடுவே ஒருவழிப்பாதையாக மாற்றியயமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த புதிய நடைமுறை, வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, காந்திரோடு வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். சாலையின்இருபுறம் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என, ஏற்கனவே போலீஸ்எஸ்.பி.,யிடம் மனுவாக அளித்திருந்தனர்.
இந்நிலையில், காந்திரோட்டில் வியாபாரிகள் நேற்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்திரோட்டில், காலை 10:30 மணியளவில், வியாபாரிகள் கைகோர்த்து நின்றனர்.
தங்களுக்கு வியாபாரம் பாதிப்பதாகவும், தடுப்புகள் அகற்றி ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என, போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.

