/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்தில் இறந்த 419 பேருக்கு அரசு இழப்பீடு 7 ஆண்டாக... கிடப்பில்:வருவாய் துறை வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு
/
விபத்தில் இறந்த 419 பேருக்கு அரசு இழப்பீடு 7 ஆண்டாக... கிடப்பில்:வருவாய் துறை வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு
விபத்தில் இறந்த 419 பேருக்கு அரசு இழப்பீடு 7 ஆண்டாக... கிடப்பில்:வருவாய் துறை வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு
விபத்தில் இறந்த 419 பேருக்கு அரசு இழப்பீடு 7 ஆண்டாக... கிடப்பில்:வருவாய் துறை வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு
ADDED : அக் 15, 2025 09:32 PM
காஞ்சிபுரம்: வருவாய் துறை அதிகாரிகளின் முறையான வழிகாட்டுதல் இல்லாததால், சாலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஏழு ஆண்டுகளாக, 419 பேரின் குடும்பத்தினர், இழப்பீடு கேட்டு காத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு வருவாய் கோட்டங்களின் கீழ், ஐந்து தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 10 காவல் நிலையங்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், மூன்று காவல் நிலையங்கள் என மொத்தம், 13 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றின் எல்லையில் உள்ள கிராமங்களில் சாலை விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு, காயத்தின் தன்மைக்கு ஏற்ப 10,000 - 50,000 ரூபாய் வரை, அரசு சார்பில் வருவாய் துறை இழப்பீடு வழங்கி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 2019 முதல், 2025ம் ஆண்டு வரை, 3,500க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.
இவர்கள், தனி நபர் காப்பீடு திட்டத்தின் மூலமாக, இழப்பீடு தொகை பெறுகின்றனர். காப்பீடு இல்லாதவர்கள், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற விண்ணப்பிக்கின்றனர்.
இது போன்ற இழப்பீடு தொகை பெற, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் துறையினரின் விசாரணை அறிக்கை, தடையில்லாத சான்று, இறந்தவரின் மருத்துவ பிரேத பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை இணைத்து வருவாய் துறையினரிடம் விண்ணப்பிக்கின்றனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அந்தந்த ஆர்.டி.ஓ., இழப்பீடு தொகை வழங்குவார்.
ஆண்டுதோறும் 20 - 96 விண்ணப்பங்கள் வரையில், சாலை விபத்திற்கான இழப்பீடு கேட்டு, வருவாய் துறையினருக்கு மனுக்கள் வருகின்றன.
இவற்றின் விண்ணப்பதாரர்களுக்கு, வருவாய் துறை நிர்வாகத்தின் முறையான வழிகாட்டுதல் இல்லாததால், சிலர் ஆவணங்கள் இன்றி, உரிய நேரத்தில் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2019 முதல், 2025ம் ஆண்டு வரை சாலை விபத்தில் இறந்த 419 பேருக்கு இழப்பீடு வழங்க முடியாமல், விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இழப்பீடு கேட்டு, வாகன விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என, அவர்களின் குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.
சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர, வருவாய் துறையினர் முனைப்பு காட்ட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினர் கூறியதாவது:
சரியான ஆவணங்கள் கொடுத்தாலும், வருவாய் துறை அதிகாரிகள் ஆவணங்களை தொலைத்துவிட்டு, புதிதாக விண்ணப்பம் கொடுக்க அறிவுரை வழங்குகின்றனர்.
புதிய ஆவணங்கள் தந்து விண்ணப்பித்தால், இந்த சான்று இல்லை, அந்த சான்று இல்லை என, காலம் தாழ்த்தி விடுகின்றனர். இழப்பீடு தொகை கேட்டு மாதக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலை விபத்து நடந்தவுடன், அந்தந்த காவல் நிலையங்களில் இருந்து, முதல் தகவல் அறிக்கையாக வழங்கி விடுகிறோம்.
இந்த ஆவணத்தை, இழப்பீடு பெறுவதற்கு இணைப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என, அறிவுரை வழங்கி விடுகிறோம். தாமத இழப்பீட்டிற்கு, வருவாய் துறையினர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினர், சில ஆவணங்களை இணைக்காமல் விண்ணப்பங்களை தருவதால், தாமதம் ஏற்படுகிறது. தவிர, இறந்தவரின் குடும்பத்தினர் வேறு ஏதேனும் திட்டத்தில் விண்ணப்பித்து இழப்பீடு தொகை பெற்றிருக்கிறாரா என, ஆய்வு செய்வதால் தாமதம் ஏற்படுகிறது.
மேலும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெளி மாவட்டத்தில் விபத்தில் இறந்திருந்தால் அம்மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து சிலவற்றை சேகரிக்க வேண்டும். இதுபோல் சில சிக்கல் உள்ளது.
இருப்பினும், சாலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை, ஆண்டுதோறும் பரிசீலனை செய்து, முன்னுரிமை அடிப்படையில் வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.