/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் - பொன்னேரிக்கரை புறவழிச்சாலை திட்டத்தில்... அரசு மவுனம்:4 ஆண்டாக துாசி தட்டப்படாத நெடுஞ்சாலை துறை அறிக்கை
/
வாலாஜாபாத் - பொன்னேரிக்கரை புறவழிச்சாலை திட்டத்தில்... அரசு மவுனம்:4 ஆண்டாக துாசி தட்டப்படாத நெடுஞ்சாலை துறை அறிக்கை
வாலாஜாபாத் - பொன்னேரிக்கரை புறவழிச்சாலை திட்டத்தில்... அரசு மவுனம்:4 ஆண்டாக துாசி தட்டப்படாத நெடுஞ்சாலை துறை அறிக்கை
வாலாஜாபாத் - பொன்னேரிக்கரை புறவழிச்சாலை திட்டத்தில்... அரசு மவுனம்:4 ஆண்டாக துாசி தட்டப்படாத நெடுஞ்சாலை துறை அறிக்கை
ADDED : டிச 25, 2025 05:51 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பொன்னேரிக்கரையில் இருந்து வாலாஜாபாத் பேரூராட்சிக்கு, 20 கி.மீ., துாரத்துக்கு, புதிதாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலை துறை திட்ட அறிக்கை சமர்பித்து, நான்கு ஆண்டுகளாகியும், தமிழக அரசு இன்னும் ஒப்புதல் தராமல் மவுனம் காத்து வருகிறது. சென்னை - பெங்களூரு தொழிற்தட திட்டத்தின் இரண்டாம் பாகத்தில், இத்திட்டம் இருப்பதாக நெடுஞ்சாலை துறையினர் சமாளிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொழிற்சாலைகள் காரணமாக, வாகன போக்குவர த்து கணிசமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சாலைகள் எப்போதும் நெரிசலாகவே காணப்படுவதால், இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாாகனங்களை பயன்படுத்தும் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனால், நெரிசல் மிகுந்த ஊர்களுக்கு புறவழிச்சாலை அவசியமாகிறது. காஞ்சிபுரத்தில் செவிலிமேடு - கீழம்பி வரை ஏற்கனவே புறவழிச்சாலை அமைக் கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
உத்திரமேரூரில் தொடரும் நெரிசல் காரணமாக, ஏ.பி.சத்திரம் முதல், வேடபாளையம் வரையிலான புறவழிச்சாலை பணிகள், 10 ஆண்டுகளுக்கு பின் நடக்கின்றன.
20 கி.மீ., துாரம்
இதைத்தொடர்ந்து, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், வாலாஜாபாத் அருகே செங்கல்பட்டு சாலையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர தயாராக உள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று புறவழிச்சாலைகள் உள்ளன. இந்நிலையில், வாலாஜாபாத் முதல் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வரையி லான, 20 கி.மீ., துாரத்தை கடக்க வாகனங்கள் சிரமப்படுகின்றன.
காஞ்சிபுரம் நகருக்குள் வந்து, பொன்னேரிக்கரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், வாலாஜாபாத் - பொன்னேரிக்கரை இடையே புதிய புறவழிச்சாலை அவசியமாகிறது.
வாலாஜாபாத் - பொன்னேரிக்கரை இடையேயான புறவழிச்சாலையை, 2011ல் அப்போதைய காஞ்சிபுரம் பா.ம.க., - எம்.எல்.ஏ., கமலாம்பாள் சட்டசபையில் பேசியபோது, நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த சாமிநாதன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பதில் அளித்துள்ளார்.
ஆனால், இன்று வரை இந்த திட்டத்திற்கான பணிகள் ஏதும் நடக்கவில்லை.
வாலாஜாபாத் பேரூராட்சியில் இருந்து புத்தாகரம், கரூர் வழியாகவும், களியனுார், ஏனாத்துார் போன்ற கிராமங்க ள் வழியாகவும், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றனர்.
பல கிராமங்களில் உள்ள குறுகலான சாலையில் சுற்றி செல்ல வேண்டியுள்ளது அல்லது காஞ்சிபுரம் நகருக்குள் வந்து பொன்னேரிக்கரையை அடைய வேண்டிய சூழல் உள்ளது.
50 கிராமங்கள்
வாகன ஓட்டிகள் எளிதாக பொன்னேரிக்கரை - வாலாஜாபாத் இடையே பயணிக்க, புதிய புறவழிச்சாலை கேட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசுக்கு, நெடுஞ்சாலை துறை திட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கடந்த ஆண்டும், சென்னை - கன்னியாகுமரி தொழிற்திடத்தின் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இருப்பினும் இத்திட்டம் இதுவரை அடுத்தகட்டத்திற்கு செல்லாமல் உள்ளது.
இந்த புறவழிச்சாலை அமைந்தால், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், காஞ்சிபுரம் நகருக்குள் வராமலேயே, நேரடியாக வாலாஜாபாத் செல்ல முடியும்.
அரசு கையில் முடிவு
அதேபோல, வாலாஜாபாத் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேர டியாக பொன்னேரிக்கரை அடைந்து, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முடியும். நெரிசல் மட்டுமின்றி பயண நேரமும் குறையும்.
இதுகுறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த திட்டம் பற்றிய அறிக்கைகளை முந்தைய ஆண்டுகளில் அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். சென்னை - கன்னியாகுமரி திட்டத்தின் முதற்கட்ட திட்டம் முடியும் நிலையில் உள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தில், வாலாஜாபாத் - பொன்னேரிக்கரை புறவழிச்சாலை திட்டம் உள்ளது.
அரசுதான் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். அரசு நிதி ஒதுக்கினா ல்தான், சர்வே எடுத்து, நிலம் கையகப்படுத்த வேண்டிய விபரங்களை சேகரித்து, அடுத்த கட்ட பணிகளை துவக்க முடியும். அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

