6,553ல் 4,289 குடிநீர் கட்டமைப்புகள் பழுதாகி முடங்கியது!சீரமைக்க நிதியில்லை என உள்ளாட்சிகள் கைவிரிப்பு
6,553ல் 4,289 குடிநீர் கட்டமைப்புகள் பழுதாகி முடங்கியது!சீரமைக்க நிதியில்லை என உள்ளாட்சிகள் கைவிரிப்பு
UPDATED : செப் 30, 2026 10:21 PM
ADDED : செப் 30, 2026 09:21 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,553 இடங்களில், மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டிகள், கை பம்புகள் அமைக்கப்பட்ட நிலையில், 4,289 இடங்களில் அவை பழுதடைந்து, பயன்பாடின்றி முடங்கியுள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், 'நிதியில்லாமல் ஒன்று செய்ய முடியாது' என, ஊராட்சி தலைவர்கள் கைவிரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், 1,354 துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில், 10,000 லிட்டர் முதல் 1 லட்சம் வரை கொள்ளளவு கொண்ட, 2,019 நீர் தொட்டிகள் உள்ளன. இவை, நீர் உறிஞ்சும் மோட்டார்கள் பொருத்தப்பட்டவை.
இதுதவிர, 2,346 கைபம்ப்கள்; 2,264 ஆழ்துளை கிணறுகள்; 1,943 மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டிகள் என, 6,553 குடிநீர் கட்டமைப்புகள் உள்ளன. மேலும், 15 ஊராட்சிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, 63.11 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றன.
மேல்நிலை நீர் தொட்டிகள் சுத்தம் செய்தல், பழுது பார்த்தல், பராமரித்தல் ஆகிய பணிகளை ஊராட்சி நிர்வாகங்கள் செய்கின்றன. சிறு மின் விசை நீர்தொட்டிகள், கை பம்ப்கள் என, நீராதாரங்கள் பழுது ஏற்பட்டால், அதை ஊராட்சி நிர்வாகங்கள் சரி செய்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள, 6,553 குடிநீர் கட்டமைப்புகளில், 2,345 கைபம்ப்கள், 1,943 மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டிகள் என, 4,289 பழுதாகி, பயன்பாடின்றி முடங்கியுள்ளன.
மேல்நிலை நீர் தொட்டிகளின் ஆழ்துளை கிணறுகள் பழுது ஏற்பட்டால், பழுது நீக்கும் வரையில் மாற்று குடிநீர் வினியோகம் செய்வது முற்றிலும் தடைபடுகிறது.
இதுபோன்ற நேரங்களில் குடிநீருக்கு அலைய வேண்டி உள்ளது என, கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பம்ப் ஆப்பரேட்டர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
மேல்நிலை நீர் தொட்டிகளின் ஆழ்துளை கிணறு பழுது ஏற்படும் போது, கைபம்ப், மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டிகள் வழியாக குடிநீர் சப்ளை செய்வது உதவியாக இருந்தது.
மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டி மற்றும் கை பம்ப்களை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க முன் வருவதில்லை. கேட்டால், நிதி இல்லை, பழுது நீக்கினால் பில் எடுக்க முடியாது என, மழுப்பி விடுகின்றனர். மக்கள் தான் சிரமத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊராட்சி தலைவர் ஒருவர் கூறியதாவது:
குடிநீர் பணிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிட மட்டுமே ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது. கூடுதல் நிதி பெற, முறையாக டெண்டரை அறிவித்து, அதன்பின் பணி ஆணை வழங்கி, பழுது நீக்க வேண்டும். அதற்குள் ஒரு மாதமாகிவிடும். அதுவரையில் மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
அதனால், தான் யாரும் மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டி மற்றும் கை பம்ப் பழுது நீக்க முன் வர மறுக்கின்றனர். மேற்கண்ட நிதியை செலவிடும் அதிகாரம் கூடுதலாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஒருவர் கூறியதாவது:
கிராம மக்கள் நலன் கருதி குளோரின் செய்த குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், மேல்நிலை நீர் தொட்டிகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டி மற்றும் கை பம்ப்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின் தடை நேரங்களில் சிரமம்
வாலாஜாபாத் வில்லிவலம் கிராம மக்கள் கூறியதாவது:
மேல்நிலை நீர் தொட்டிகள் மூலமாக, பாலாறு குடிநீரை ஊராட்சி நிர்வாகம் வினியோகம் செய்யப்படுகிறது. மழைக்காலங்களில் மின் தடை ஏற்பட்டால், குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கிறது. இதுபோன்ற நேரங்களில், கை பம்பு பயன்பாட்டில் இருந்தால், தண்ணீர் தேவை பூர்த்தி செய்துக்கொள்வோம். பழுது நீக்காததால், குடிநீர் தேவைக்கு நாங்கள் பம்புசெட்களை தேடி அலைய வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
