/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை மருந்தகமின்றி களியப்பேட்டை அவதி
/
கால்நடை மருந்தகமின்றி களியப்பேட்டை அவதி
ADDED : ஜன 08, 2024 11:59 PM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டையில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. பால் உற்பத்திக்காக கறவை பசுக்கள் மற்றும் எருமை மாடுகள் அதிகம் இப்பகுதியில் வளர்க்கப்படுகின்றன.
மேலும், விவசாயம் நிறைந்த பகுதி என்பதால், உழவு மாடுகளும் அதிக அளவில் பராமரிக்கப்படுகிறது. இதேபோன்று, களியப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராஜம்பேட்டை கிராமத்திலும் கால்நடைகள் வளர்ப்பில் அப்பகுதியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால், களியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் கால்நடை மருந்தக வசதி இல்லை. இதனால், இப்பகுதியில் உள்ள ஆடு, மாடுகள் நோயுற்றால் 6 கி.மீ., துாரத்தில் உள்ள அரும்புலியூர் அல்லது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்துார் பகுதி கால்நடை மருந்தகம் சென்று, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை தொடர்கிறது.
இதனால், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க இயலாமல் இப்பகுதி கால்நடை பராமரிப்போர் அவதிபடுகின்றனர்.
எனவே, கால்நடைகள் அதிகம் பராமரிக்கப்படும் களியப்பேட்டையில் கால்நடை மருந்தகம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.