/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி - செய்யாறு ரயில் திட்டம் இம்முறையும்...ஏமாற்றம்!:பட்ஜெட்டில் அறிவிக்காததால் பயணியர் அதிருப்தி
/
காஞ்சி - செய்யாறு ரயில் திட்டம் இம்முறையும்...ஏமாற்றம்!:பட்ஜெட்டில் அறிவிக்காததால் பயணியர் அதிருப்தி
காஞ்சி - செய்யாறு ரயில் திட்டம் இம்முறையும்...ஏமாற்றம்!:பட்ஜெட்டில் அறிவிக்காததால் பயணியர் அதிருப்தி
காஞ்சி - செய்யாறு ரயில் திட்டம் இம்முறையும்...ஏமாற்றம்!:பட்ஜெட்டில் அறிவிக்காததால் பயணியர் அதிருப்தி
ADDED : பிப் 04, 2025 09:50 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செய்யாறு இடையேயான, 30 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாதை திட்டம், இம்முறை மத்திய ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்பு ஏதும் வராதது, ரயில் பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில், பாஜ., அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா, சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அதில், ரயில்வே திட்டங்கள் உட்பட தமிழகத்திற்கு எவ்வித சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என, ஆளும் தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சி அ.தி.மு.க., - த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மத்திய பா.ஜ., அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இதையடுத்து, ரயில்வே திட்டங்களுக்காக, இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, 2025- - 26ம் நிதியாண்டில், தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு, 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2024 - -25ம் நிதியாண்டில், 6,326 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது, 300 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், முக்கியமான எதிர்பார்ப்பு மிகுந்த திட்டங்கள் பல அறிவிக்கப்படவில்லை என, ரயில் பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இல்லை என்கின்றனர்.
உதாரணமாக, காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதிக்கான புதிய ரயில்வே பாதை அமைக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்தாண்டு, காஞ்சிபுரம் - செய்யாறு இடையேயான புதிய ரயில் பாதைக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு ஏதும் வராதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
திண்டிவனம் - நகரி இடையேயான புதிய ரயில் பாதை திட்டம், கடந்த 2006ல் அறிவிக்கப்பட்டு, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 180 கி.மீ., துாரத்துக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இந்த ரயில் பாதையுடன் இணைக்கும் வகையில், செய்யாறு வரை காஞ்சிபுரம் - செய்யாறு இடையேயான 30 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை திட்டம் அறிவிப்பு செய்து, செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
செய்யாறு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது. புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால், சென்னையிலிருந்து நேரடியாக செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கும், ரயில் வசதி கிடைக்கும் என, பயணியர் தெரிவிக்கின்றனர்.
ரயில்வே துறையினர், இதற்கான சர்வே பணிகளை துவங்க வேண்டும். செய்யாறு செல்லும் வழியில், சிப்காட் பகுதியும் அமைந்திருப்பதால், ஏராளமான தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
இதற்கான அறிவிப்பை ரயில்வே துறையினர் வெளியிட வேண்டும் எனவும், இதற்கான சர்வே, நில எடுப்பு பணிகளை உடனே துவக்க வேண்டும் என, ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் செய்யாறு பகுதிகளைச் சேர்ந்த பயணியர் கூறியதாவது:
காஞ்சிபுரம், செய்யாறு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர், பணி நிமித்தமாகவும், சொந்த வேலைக்காகவும், மருத்துவமனை உள்ளிட்ட பிற தேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
இவர்கள், பேருந்து சேவையை மட்டுமே நம்பியுள்ளனர். காஞ்சிபுரம் - செய்யாறு இடையே புதிய ரயில் பாதை அமைத்தால், தினமும் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் வந்து செல்ல எளிதாக இருக்கும்.
சென்னையிலிருந்து நேரடியாக செய்யாறு, ஆரணி, வந்தவாசி போன்ற பகுதிகளுக்கு ரயில் சேவை பெற முடியும். பள்ளி மாணவ - மாணவியர் செல்லும் வகையில், போதிய பேருந்துகளும் இல்லாததால், படிக்கட்டில் தொங்கியபடி செல்ல வேண்டியுள்ளது.
தினமும் அதிகாலை முதல் இரவு வரை நெருக்கடியாகவே பேருந்துகளில் பயணியர் செல்கின்றனர். ரயில் வசதி இருந்தால், பயணியர் சிரமமின்றி பயணிப்பர். நகரிக்கு செல்லும் புதிய ரயில் பாதை செய்யாறு வழியாக அமைக்கப்படுகிறது. இதனால், காஞ்சிபுரத்திலிருந்து நேரடியாக திண்டிவனத்துக்கு ரயிலில் செல்ல முடியும்.
செய்யாறிலிருந்து, தடம் எண்: 130 என்ற பேருந்து வாயிலாக, சென்னைக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். பேருந்து பயணம் நெருக்கடியாகவும், சீட் கிடைக்காமல் அவதிப்படும் வகையில் உள்ளது.
அதுவே, ரயில் சேவை வழங்கினால், அலைச்சல் இல்லாமல், பயணியர் அமர போதுமான இருக்கை வசதி இருக்கும் என்பதால், சிரமமின்றி செல்ல முடியும். மத்திய அரசின் ரயில்வே துறை, காஞ்சிபுரம் - செய்யாறு இடையேயுள்ள 30 கி.மீ., துாரத்துக்கான புதிய ரயில் பாதையை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.