/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சங்கர மடத்திற்கு இளைய மடாதிபதி நியமனம் 30ம் தேதி சன்யாச தீட்சை பெறுகிறார்
/
காஞ்சி சங்கர மடத்திற்கு இளைய மடாதிபதி நியமனம் 30ம் தேதி சன்யாச தீட்சை பெறுகிறார்
காஞ்சி சங்கர மடத்திற்கு இளைய மடாதிபதி நியமனம் 30ம் தேதி சன்யாச தீட்சை பெறுகிறார்
காஞ்சி சங்கர மடத்திற்கு இளைய மடாதிபதி நியமனம் 30ம் தேதி சன்யாச தீட்சை பெறுகிறார்
ADDED : ஏப் 26, 2025 01:49 AM

சென்னை:காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற, பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஆந்திர மாநிலம் துனி நகரில் பிறந்த, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார்.
காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் வெளியிட்ட அறிக்கை:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஆந்திர மாநிலம் துனி நகரை சேர்ந்த, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு வரும் 30ம் தேதி, அட்சய திருதியை அன்று, சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்க உள்ளார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், பஞ்ச கங்கா திருக்குளத்தில், காலை, 6:00 முதல் 9:00 மணி வரை, இந்நிகழ்வு நடக்க உள்ளது. காஞ்சிபுரத்தில் கி.பி., 482ல், சங்கர மடத்தை நிறுவிய ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரரின், 2534வது ஆண்டு ஜெயந்தி மகோத்சவம் நடக்க உள்ள நிலையில், இந்நிகழ்வு நடக்க இருப்பது தனிச்சிறப்பாகும்.
இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, கணேச சர்மா, ஆந்திர மாநிலம் அன்னவரத்தில் ரிக்வேதம் முழுதும் படித்தவர்.
அதன்பின், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பசாராவில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவை புரிந்தார். 2006ல், வேதபாடங்களை கற்க துவங்கிய காலம் முதலே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளின் பூரண அருளாசியை பெற்றார்.
ஸ்ரீ பெரியவர்களின் ஆசியுடன் யஜூர் வேதம், சாம வேதம், ஷதங்கங்கள், உபநிஷதங்கள் அனைத்தையும் கற்று தேர்ந்து, தற்போது சாஸ்திரங்கள் படித்து வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின், 68வது பீடாதிபதியான, காஞ்சி மகா பெரியவர் என்றழைக்கப்படும், ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1983 மே 29ல், மடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நியமித்தார்.
இவர், மடத்தின், 69வது பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்த பிறகு, மடத்தின், 70வது பீடாதிபதியாக உள்ளார். தற்போது, 42 ஆண்டுகளுக்கு பின், காஞ்சி சங்கர மடத்திற்கு, இளைய மடாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைய மடாதிபதியாக தீட்சை பெற உள்ள, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட், 2001ம் ஆண்டு, ஆந்திர மாநிலம் துனி நகரில் பிறந்தார். தந்தை சீனிவாச சூர்ய சுப்ரமண்ய தன்வந்திரி. இவர் அன்னவரம், வீர வெங்கட சத்யநாராயண கோவிலில் புரோகிதராக பணியாற்றி வருகிறார். தாயார் அலிவேலு மங்கா தேவி.
கடந்த 2009ல் திருப்பதியில் உள்ள, தாய் மாமா வீட்டிற்கு சென்றபோது, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசனம் செய்தார்.
அப்போதே கணேச சர்மாவின் பின்னணியை சுவாமிகள் கேட்டறிந்தார். அன்னவரத்தில் அவர் வேதம் படிக்க வழி காட்டினார்.

