ADDED : டிச 07, 2024 07:50 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில், 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம், கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமை, காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி துவக்கி வைத்தார். இதில், காஞ்சிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி தலைமையில், திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., ஆரம்பகால புற்றுநோய், மகளிருக்கான சிறப்பு சிகிச்சை, இதயம், சிறுநீர், எலும்பு, காது, மூக்கு, தொண்டை, காசநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, நோயின் தன்மைக்கேற்ப மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இதில், கீழ்கதிர்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 984 பேர் பங்கேற்றனர்.