/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் கோவில்களில் நவராத்திரி விழா துவக்கம்
/
காஞ்சிபுரம் கோவில்களில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 23, 2025 12:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, கோமளவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் யதோக்தகாரி பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளினார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள கண்ணாடி அறையில், நேற்று காலை 6:00 மணிக்கு பெருமாள், தாயார் விஸ்வரூப சேவை நடந்தது.
மாலை 6:30 மணிக்கு 100 கால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது.
கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன் வல்லவ விநாயகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 47 வது வார்டு அண்ணா நெசவாளர் குடியிருப்பில் உள்ள ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவிலில் மாவடி சேவை அலங்காரம் நடந்தது. காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் உலக நன்மைக்காக மஹா சதசண்டி ஹோமம் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்றார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு பூர்வாங்க சண்டி ஹோமமும், இரவு வாஸ்து சாந்தியும் நடந்தது.
காஞ்சிபுரம் பல்லவர்மேடு கிழக்கு, வ.ஊ.சி., தெரு மகா தீப்பாஞ்சி அம்மன், ஆதிகாமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நவராத்திரி விழாவையொட்டி இக்கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.