/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்வசதி இல்லாத ஒரக்காட்டுபேட்டை பாலம்
/
மின்வசதி இல்லாத ஒரக்காட்டுபேட்டை பாலம்
ADDED : அக் 17, 2024 10:10 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஓரக்காட்டுபேட்டையில் இருந்து, செங்கல்பட்டு சாலையை இணைக்கும் பாலாற்று பாலம், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
ஒரக்காட்டுப்பேட்டை, காவூர், காவித்தண்டலம், விச்சூர், திருவானைக்கோவில், களியப்பேட்டை, ராஜாம்பேட்டை, மிளகர்மேனி, கரும்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்தோர், இந்த பாலத்தின் வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், இப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இரவு வரை இந்த பாலத்தின் வழியாக பயணிக்கின்றனர்.
இந்த மேம்பாலத்தின் மீது இதுவரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பாலத்தின் மீது இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
ஒரக்காட்டுப்பேட்டை மற்றும் காவூர் கிராமத்தை சுற்றி உள்ள செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து, ஏராளமான லாரிகள் இரவு பகலாக இந்த மேம்பால சாலையில் இயங்குகிறது.
மின் வசதி இல்லாததால் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகின்றன. இதுவரை 7 விபத்துக்கள், 4 நபர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஒரக்காட்டுபேட்டை பாலத்தின் மீது மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.