/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரத்துார் நீர்த்தேக்க பணி நான்கு ஆண்டாக...முடக்கம்:நிலம் கையகப்படுத்துவதில் தொடர் இழுபறி
/
ஒரத்துார் நீர்த்தேக்க பணி நான்கு ஆண்டாக...முடக்கம்:நிலம் கையகப்படுத்துவதில் தொடர் இழுபறி
ஒரத்துார் நீர்த்தேக்க பணி நான்கு ஆண்டாக...முடக்கம்:நிலம் கையகப்படுத்துவதில் தொடர் இழுபறி
ஒரத்துார் நீர்த்தேக்க பணி நான்கு ஆண்டாக...முடக்கம்:நிலம் கையகப்படுத்துவதில் தொடர் இழுபறி
ADDED : ஜூலை 08, 2025 10:29 PM

படப்பை:சென்னையின் எதிர்கால குடிநீர் தேவை கருதி, 55.85 கோடி ரூபாயில், ஒரத்துாரில் துவக்கப்பட்ட புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, நான்கு ஆண்டுகளாக முடக்கப்பட்டு உள்ளது. கரை அமைக்க, 420 மீட்டர் நிலத்தை தனியாரிடம் இருந்து கையகப்படுத்துவது தொடர் இழுபறியாக இருப்பதால், அப்பகுதியில் 600 ஏக்கர் விவசாய பரப்பு தரிசாகிறது. நிலத்தை கையகப்படுத்தி, விவசாயத்திற்கு உயிரூட்ட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஒரத்துார் அருகே, அடையாறு கால்வாயின் கிளை கால்வாய் துவங்குகிறது. இந்த கால்வாய் இடையே உள்ள ஒரத்துார் ஏரி மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.
எதிர்கால குடிநீர் தேவை கருதி, இரு ஏரிகளையும் இணைத்து, 55.85 கோடி ரூபாயில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கியது.
குடிநீர் தேவை
மொத்தம் 763 ஏக்கர் நீர்ப்பரப்புடன் அமையும் இந்த நீர்த்தேக்கத்தில், 1 டி.எம்.சி., கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியும். அப்பகுதி விவசாயத்திற்கும், சென்னையின் எதிர்கால குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நீர்த்தேக்கத்திற்காக அடையாறு கிளை கால்வாய் குறுக்கே, ஐந்து கண் மதகு அமைத்து, அங்கிருந்து ஆரம்பாக்கம் ஏரி வரை, கரை அமைக்கப்பட்டது.
அதேபோல், ஏரி மதகில் இருந்து ஒரத்துார் ஏரி வரை, 420 மீட்டருக்கு கரை அமைக்கும் பணிக்கு தேவையான, 84 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தவில்லை.
இதனால் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, 80 சதவீதம் நிறைவடைந்தும், 2021ம் ஆண்டு பாதியில் இருந்து, நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட, 420 மீட்டருக்கு கரை அமைக்க முடியாமல் இருப்பதால், மழைக்காலத்தில் நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீர், அந்த இடத்தின் வழியாக வெளியேறி, விவசாய நிலத்தில் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது.
இதனால், தண்ணீர் வெளியேறுவதை தடுக்க, நீர்த்தேக்கத்தின் உட்புறம் தற்காலிக கரை அமைக்கப்பட்டது. இந்த கரை, நீர்த்தேக்கத்திற்கு வரும் அதிகப்படியான தண்ணீரை தேக்க முடியாமல், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் உடைப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதே தொடர்கதையாக இருப்பதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
நீர்த்தேக்கம் அமைவதற்கு முன் ஒரத்துார், ஆரம்பாக்கத்தில், 600 ஏக்கர் விவசாய நிலத்தில் ஆண்டுக்கு இரு போகம் விவசாயம் நடந்தது. தற்போது ஒரு போகம்கூட விவசாயம் செய்ய முடியாமல், நிலங்கள் தரிசாகின்றன.
தாமதம்
நான்கு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நீர்த்தேக்க பணியால் கோடையில் தண்ணீர் இல்லாமலும், மழைக்காலத்தில் ஒரே நேரத்தில் அதிகப்படியான வெள்ளநீர் வெளியேறுவதாலும் ஒரத்துார், ஆரம்பாக்கம் கிராமத்தில், 600 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரத்துாரில் 84 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தும் பணியை, அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
கிடப்பில் உள்ள நீர்த்தேக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கையகப்படுத்தும் நிலத்திற்கு மாற்று நிலம் வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தனி நபர் ஒருவர், நிலம் வழங்குவது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
'வழக்கு முடிந்ததும், மாற்று நிலம் வழங்கி, நீர்த்தேக்க கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படும்' என்றார்.