/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துகாடில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
/
ஊத்துகாடில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
ஊத்துகாடில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
ஊத்துகாடில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
ADDED : டிச 02, 2024 02:10 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலான பெரிய ஏரி உள்ளது. பருவ மழைக்கு இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அந்த தண்ணீரைக் கொண்டு அப்பகுதி விவசாயிகள் மூன்று போகம் சாகுபடி செய்வர்.
கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த தென் மேற்கு பருவ மழைக்கு, இந்த ஏரியில் கணிசமான அளவுக்கு தண்ணீர் சேகரமானது. அதை தொடர்ந்து, முதற்பட்ட சம்பா பருவத்திற்கு அப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
அப்பயிர்கள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. சில தினங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால் பெய்த கன மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் நிலங்களில் மழைநீர் புகுந்தது.
சில நிலப் பகுதிகளில், வரப்புகளை வெட்டி விவசாயிகள் மழைநீரை வெளியேற்றினாலும், 30 ஏக்கர் பரப்பிலான நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது. அப்பயிர்கள் அறுவடை செய்ய இயலாத நிலை உள்ளதாகவும், அறுவடை செய்தாலும், நெல் முளைப்பு காரணமாக போதுமான மகசூல் கிடைக்காது என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் நேரு கூறியதாவது:
மூன்று நாட்களாக பெய்த கன மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல இடங்களில் நெல், வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதித்துள்ளன. 300 ஏக்கர் பரப்பிலான நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகி உள்ளன.
இதுகுறித்து வேளாண் மற்றும் வருவாய் துறை வாயிலாக மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து, மழைநீரில் மூழ்கி சேதமான நெல் பயிருக்கு, ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.