/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தவறாக பதிவான பட்டாக்களில் திருத்தம் கோரும் மக்கள்...நீண்டகால தவம்: விடாமல் படையெடுத்தாலும் அலையவிடும் அதிகாரிகள்
/
தவறாக பதிவான பட்டாக்களில் திருத்தம் கோரும் மக்கள்...நீண்டகால தவம்: விடாமல் படையெடுத்தாலும் அலையவிடும் அதிகாரிகள்
தவறாக பதிவான பட்டாக்களில் திருத்தம் கோரும் மக்கள்...நீண்டகால தவம்: விடாமல் படையெடுத்தாலும் அலையவிடும் அதிகாரிகள்
தவறாக பதிவான பட்டாக்களில் திருத்தம் கோரும் மக்கள்...நீண்டகால தவம்: விடாமல் படையெடுத்தாலும் அலையவிடும் அதிகாரிகள்
ADDED : மார் 06, 2025 08:09 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கான பட்டாவில், தவறாக கோவில் பெயர் பதிவாகியிருப்பதால், அவற்றை மாற்றித் தரக்கோரி, ஆண்டுக்கணக்கில் கிராமத்தில், கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என, அலைந்து திரிகின்றனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறி, அலைய வைப்பதாக மக்கள் புலம்புகினறனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பட்டா சம்பந்தமான சேவைகளில், பட்டா திருத்தம் முக்கிய பணியாக பார்க்கப்படுகிறது. பட்டாவில் ஏற்படும் பிழைகளால், சொத்துக்களின் உரிமை கோருவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பட்டா பிழைகளால், சொத்துக்களை முழு உரிமை கோர முடியாமல், அவற்றை திருத்தம் செய்ய வருவாய் துறை அலுவலகங்களுக்கு, சொத்து உரிமையாளர்கள் நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது.
தனி நபர்களுக்கு மட்டுமின்றி, கிராமத்தின் ஒரு பகுதி முழுதும் பட்டா திருத்தம் செய்ய, பல ஆண்டுகளாகவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராம மக்கள் அலைந்து திரிகின்றனர். அதுதொடர்பாக மனு அளிப்பது தொடர்ந்தாலும், நடவடிக்கை இல்லை என, மக்கள் புலம்புகின்றனர்.
இந்த வகையில், பட்டாவில் திருத்தம் கிடைக்கும் என, உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்த சித்தனக்காவூர் கிராமத்தினர், பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சித்தனக்காவூர் ஊராட்சியில், பட்டியிலன மக்கள் வசிக்கும் பகுதியில், சர்வே எண் 13ல், முத்தீஸ்வரர் கோவில் பெயரில், 1983ல், நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பட்டா பதிவு செய்யும்போது, கோவில் பெயரில் பட்டா தாக்கலாகி இருப்பதாக, ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் என்பவர், தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என, பல்வேறு இடங்களில் மனு அளித்து வருகிறார்.
ஆனால், பட்டா திருத்தம் மேற்கொண்டு பட்டா வழங்கவில்லை என, அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கிறார்.
இதுதொடர்பாக, சித்தனக்காவூர் ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியை, கோவில் பெயரில் பட்டா வழங்கி தவறுதலாக வருவாய் துறையினர் பதிவு செய்துள்ளனர். நாங்கள் மூன்று ஆண்டுகளாக பட்டா வழங்க கோரி போராடி வருகிறோம். ஆனால், போதிய நடவடிக்கை இல்லை.
கடந்த வாரம், கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம்கூட நடத்திவிட்டோம். அடுத்த வாரம் திங்கட்கிழமையன்று சமையல் பாத்திரம் கொண்டு வந்து, கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்யும் போராட்டம் நடத்த உள்ளோம்.
மாவட்ட வருவாய் அலுவலரிடம் நாங்கள் மனு அளித்தோம். அதைத் தொடர்ந்து, சர்வே துறையினர், அந்த இடத்தை அளந்தார்கள். அதன்பின், எந்த விபரமும் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தனக்காவூர் போல, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, கீழ்கதிர்பூர் ஊராட்சியிலும், சர்வே எண் 111/1 என்ற இடத்தில், 80 ஆண்டுகளுக்கு மேலாக, 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிப்பதாகவும், அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை கோவில் பெயரில் பட்டா பதிவாகியிருப்பதாக, கீழ்கதிர்பூர் ஊராட்சியின் வார்டு உறுப்பினர் மேகநாதன் என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகிறார்.
கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு, கோவில் பெயரில் தவறுதலாக தாக்கலான பட்டாவை திருத்தம் செய்து தராமல் உள்ளனர் என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுபோல, பட்டா திருத்தம் செய்து தர வேண்டி, அந்தந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், கலெக்டர் அலுவலகத்திற்கும் பலர் அலைவது தொடர் கதையாக உள்ளது.
சிலருக்கு பட்டா திருத்தம் செய்து உத்தரவுகள் வழங்கப்பட்டாலும், விசாரணை, உத்தரவு போன்ற நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை என, மனு அளிப்போர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:
சித்தனக்காவூர் ஊராட்சியில், கோவில் பெயரில் தாக்கலான பட்டா குறித்து விசாரித்து வருகிறோம். அதில், 5 சென்ட் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியாக பட்டாவில் தாக்கலாகி இருப்பதையும் பார்த்தோம்.
மக்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றால், ஹிந்து சமய அறநிலையத் துறை இதில் விசாரணை நடத்தி, அவர்களின் கருத்துக்களை வழங்க வேண்டும். நிலத்தை சமீபத்தில் அளந்துள்ளோம். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்.
அதேபோல, கீழ்கதிர்பூர் கிராமத்தில் அப்பகுதியினர், பட்டா கேட்கும் இடம், அரசு இடம் என தெரியவந்துள்ளது. மேலும், சில விசாரணைகள் முடித்து, அரசுக்கு கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.