/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
/
ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
ADDED : செப் 25, 2024 07:12 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை மனுக்கள் தரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ருதுவேலன், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசனிடம் மனு அளித்தார்..
மனு விபரம்
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சியில், 5,000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்கு செங்கல்பட்டு அல்லது வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இடைவெளி தூரம் காரணமாக கர்ப்பிணியர் அவதிப்படுகின்றனர்.
மேலும், பழையசீவரம் எதிர்புறக்கரையில், பாலாற்றங்கரையொட்டி, பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தோரும், அவசர ஆபத்து நேரங்களில் பழையசீவரம் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இதனால், பழையசீவரத்தை சுற்றி உள்ள பல கிராம மக்களும் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை கிடைக்காமல் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, பழையசீவரம் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.