/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீருடன் கலந்து கழிவுநீரை வெளியேற்றி...அட்டூழியம்!: தனியார் தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் பாழ்
/
மழைநீருடன் கலந்து கழிவுநீரை வெளியேற்றி...அட்டூழியம்!: தனியார் தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் பாழ்
மழைநீருடன் கலந்து கழிவுநீரை வெளியேற்றி...அட்டூழியம்!: தனியார் தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் பாழ்
மழைநீருடன் கலந்து கழிவுநீரை வெளியேற்றி...அட்டூழியம்!: தனியார் தொழிற்சாலைகளால் நீர்நிலைகள் பாழ்
ADDED : டிச 06, 2025 05:44 AM

காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை, சமீபத்திய மழைநீருடன் வெளியேற்றுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த கழிவுநீர், கிராமங்களில் நீர்வரத்து கால்வாய், குளங்களில் கலந்து பாழாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம், வாலாஜாபாத், படப்பை ஆகிய 'சிப்காட்' பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
சிறுகாவேரிப்பாக்கம், புத்தேரி, கருப்பட்டிதட்டடை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலைகள் மற்றும் ஆரியபெரும்பாக்கம், திம்மசமுத்திரம் ஆகிய பகுதிகளில் பால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
மேற்கண்ட தனியார் தொழிற்சாலைகளில், ஆழ்துளை கிணறுகள் மூலமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. தனியார் தொழிற்சாலைகளில் பொருட்களை தயாரித்த பின், கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்த கழிவுநீரை சுத்திகரித்த பின்னரே, அந்தந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் வெளியேற்ற வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதை, பெரும்பாலான தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடைப்பிடிப்பதில்லை.
குறிப்பாக, குன்றத்துார் ஒன்றியம், ஆரம்பாக்கம் கிராமத்தில், மின் உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், சமீபத்திய மழைநீருடன் கலக்கும் வகையில் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டது. இந்த கழிவுநீர், சாலைகளில் தேங்கி நிற்கிறது. ஆனால், தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர், எங்கள் தொழிற்சாலை கழிவுநீர் இல்லை என மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அதேபோல், வாலாஜாபாத் ஒன்றியம், இலுப்பப்பட்டு ஊராட்சியில் தனியார் மின்மாற்றி தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், அதே பகுதியில் ஏரி நீர் மாசு அடைகிறது.
மேலும், வேளியூர் தனியார் பேப்பர் மில்லில், காகித கூழ் கழிவுநீர் வரத்து கால்வாய் வழியாக கழிவுநீரை வெளியேற்றுவதால், ஊவேரி குளத்தில் தண்ணீரின் நிறம் மாறி ஆடு, மாடுகள் குடிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளது.
தவிர, ஆரியபெரும்பாக்கம், திம்மசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் இயங்கும் தனியார் பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் கழிவுநீர் நேரடியாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கோடை காலத்தில் கால்வாய், குளங்களில் தண்ணீர் இருந்தாலும், மாசு படிந்த தண்ணீரை ஆடு, மாடுகள் குடிக்க முடியாத நிலை உருவாகும் என, கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஊவேரி கிராமத்தைச் சேர்ந்த என்.சுதாகர் கூறியதாவது:
ஊவேரி கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக குளம் வெட்டி கற்கள் பதித்தனர். இதில் சேகரமான நீர், ஆடு, மாடுகளின் குடிநீர் தாகத்தை தீர்த்து வந்தது.
வேளியூர் பேப்பர் மில் கழிவுநீரை மழைக்காலத்தில் திறந்து விடுகின்றனர். இந்த கழிவுநீர் குளத்தில் கலந்து, தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தை சுத்தப்படுத்தி, மீண்டும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தினகரன் கூறுகையில், ''எந்தெந்த தொழிற்சாலைகளில் கழிவுநீர் விடப்பட்டுள்ளது என ஆய்வு செய்து, முறையாக நோட்டீஸ் வழங்கி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
ஒரகதத்தில் உள்ள தொழிற்சாலைக்கு தினமும் இந்த சாலை வழியாக சென்று வருகிறேன். சில மாதங்களாக இந்த சாலையில் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த சாலையோரம் உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதாக தெரியவில்லை. இதனால் கழிவுநீர் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் மர்மமாகவே உள்ளது. நேற்று முன்தினம் இரவு, படப்பை சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதனால், இந்த பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. - சி.பாலாஜி, தொழிற்சாலை ஊழியர், படப்பை.

