ADDED : நவ 10, 2024 12:56 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில், 2002ல், பொது கழிப்பறை கட்டடம் கட்டடப்பட்டது. கழிப்பறையை அப்பகுதியினர் மட்டுமின்றி, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்பவர்களும் பயன்படுத்தி வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், ஆறு ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாயின் மின்மோட்டார் பழுதடைந்தது. மாநகராட்சி நிர்வாகம், பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்காததால், கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொது கழிப்பறை வளாகத்திலும், கழிப்பறை நுழைவாயில் பகுதியிலும் அரசு மற்றும் ஆலமர செடிகள் செழித்து வளர்ந்து வருவதால், கட்டடம் வீணாகி வருகிறது.
எனவே, பராமரிப்பின்றி உள்ள பொது கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.