/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதுப்பித்த ராஜாஜி மார்க்கெட் நாளை மறுநாள் திறப்பு
/
புதுப்பித்த ராஜாஜி மார்க்கெட் நாளை மறுநாள் திறப்பு
புதுப்பித்த ராஜாஜி மார்க்கெட் நாளை மறுநாள் திறப்பு
புதுப்பித்த ராஜாஜி மார்க்கெட் நாளை மறுநாள் திறப்பு
ADDED : பிப் 12, 2025 01:53 AM
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், 100 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில், போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது. இதனால், புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டும் பணிகள், 7 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2022ல் துவக்கப்பட்டன.
மார்க்கெட் கட்டுமான பணிகள் துவங்கியதால், ஓரிக்கையில் தற்காலிக மார்க்கெட் இடம் மாறியது.
மார்க்கெட் கட்டட பணி, அடுத்த ஓராண்டில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் இழுத்தடிக்கப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், முதல்வர் ஸ்டாலின் மார்க்கெட்டை திறந்து வைத்தார். மார்க்கெட்டில், கான்கிரீட் தளம் கொண்ட கடைகள், தரை கடைகள், கிடங்கு என, 258 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
மார்க்கெட் திறந்த பின், அடுத்த ஓரிரு மாதங்களில் வாடகை, 'டெண்டர்' உள்ளிட்ட பணிகள் முடிந்து, புதிய மார்க்கெட்டில் வியாபாரத்தை துவங்குவோம் என, வியாபாரிகள் பலரும் காத்திருந்தனர். கடைகளை டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டது.
டெண்டர் உத்தரவாத தொகை, டிபாசிட் தொகை போன்றவை குறைக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, 1 கோடியில் இருந்து 50 லட்சம் ரூபாயாக மாநகராட்சி நிர்வாகம் குறைத்தது.
மேலும், 'டெண்டர்' விடும் பணியை, மூன்று முறை மாநகராட்சி நிர்வாகம் ஒத்தி வைத்தது. இதனால், வியாபாரிகள் கடும் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து, அதிகபட்ச தொகையாக, 1.71 கோடி ரூபாய்க்கு மார்க்கெட் சங்கம், ராஜாஜி மார்க்கெட் கடைகளை ஏலம் எடுத்தது.
இதையடுத்து, மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள உணவகம், கடைகள், கிடங்கு என, 258 கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் உரிமையை, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் பெற்றது. டெண்டர் விடுவதில் பல மாதங்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, கடந்த மாதம் 12ம் தேதி ராஜாஜி மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் கட்டடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து வர்ணம் தீட்டுதல், உட்புறத்தில் தடுப்பு கம்பி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சமீபத்தில் முடிந்தது.
வியாபாரத்துக்கு தயாரான நிலையில், வரும் 14ம் தேதி ராஜாஜி மார்க்கெட்டில் வியாபாரம் துவங்குவதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.