/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பழுது
/
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பழுது
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பழுது
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பழுது
ADDED : செப் 28, 2025 12:44 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார அரசு மருத்துவமனையில், பழுதடைந்துள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பஜார் வீதியில் வட்டார அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் மக்கள் மருத்துவ சேவைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் 200 பேர் உள்நோயாளிகளாகவும், 1,000 பேர் புற நோயாளிகளாகவும் தினமும் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், இங்கு, 'கொரோனா' பெருந்தொற்று காலத்தில், 'ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம் சார்பில், 200 லிட்டர் திறன் கொண்ட மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது.
இதன் மூலம், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை முறையான பராமரிப்பு இல்லாமல், நான்கு ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது.
இதற்கு பதிலாக மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதில், குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து சிகிச்சை பிரிவுகளும் விரைவில் துவங்கப்பட உள்ளது.
எனவே, நோயாளிகளுக்கு தடையின்றி மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க, பழுது ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்வர் கூறியதாவது:
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில், 'கொரோனா' காலத்தில், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு, சில ஆண்டுக்கு முன் பழுது ஏற்பட்டது.
தற்போது, கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில் நோயாளிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.