/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
12 நிலையங்களில் ரூ.124 கோடி குவிந்தும்... பாராமுகம்!: காஞ்சியில் எப்போது இரட்டை ரயில் பாதை?
/
12 நிலையங்களில் ரூ.124 கோடி குவிந்தும்... பாராமுகம்!: காஞ்சியில் எப்போது இரட்டை ரயில் பாதை?
12 நிலையங்களில் ரூ.124 கோடி குவிந்தும்... பாராமுகம்!: காஞ்சியில் எப்போது இரட்டை ரயில் பாதை?
12 நிலையங்களில் ரூ.124 கோடி குவிந்தும்... பாராமுகம்!: காஞ்சியில் எப்போது இரட்டை ரயில் பாதை?
ADDED : மே 04, 2024 11:15 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சுற்றியுள்ள 12 ரயில் நிலையங்கள் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில் மட்டும், 124 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல, வாலாஜாபாத் கார் முனையம் அமைந்தது முதல், 279 கோடி ரூபாய் ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும், இரட்டை ரயில் பாதை அமைக்காமல், ரயில்வே நிர்வாகம் பாராமுகமாக இருந்து வருகிறது.
தெற்கு ரயில்வேயின், சென்னை மண்டலம் கீழ் இயக்கப்படும் மின்சார ரயில்கள், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி, வேளச்சேரி அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் இயக்கப்படுகின்றன.
ஆனால், மின்சார ரயிலை அதிகம் பயன்படுத்தும் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான பகுதிகளுக்கு போதிய ரயில் சேவைகள் இருப்பதில்லை. இயக்கப்படும் மின்சார ரயில்கள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளன.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னைக்கு சென்று பணிபுரிவோர் மற்றும் சொந்த வேலை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.
பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதால், ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயும் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 56 கி.மீ., துாரத்தில், 12 ரயில் நிலையங்களின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயாக உயர்ந்து கொண்டே வருகிறது.
ஐந்து ஆண்டுகளில், இந்த 12 ரயில் நிலையங்கள் வாயிலாக, ரயில்வே நிர்வாகத்துக்கு கிடைத்த வருமானம் மட்டும் 124 கோடி ரூபாய் என, காஞ்சிபுரம் - சென்னை ரயில் பயணியர் சங்கத்தினர், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்ட கேள்விகளுக்கு, ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
நிர்வாகம் மெத்தனம்
இருப்பினும், செங்கல்பட்டு -- அரக்கோணம் இடையே, 56 கி.மீ., துாரம் இரட்டை ரயில்பாதை அமைக்காமல், பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.
'கொரோனா' பரவல் காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில், வருமானம் குறைந்தாலும், அடுத்து வந்த ஆண்டுகளில் இயல்பான வருமானத்தை ரயில்வே நிர்வாகம் பெற்றுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைத்தபோதும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையேயான, கூடுதல் ரயில் சேவைகளும், அடிப்படை தேவைகளும் இன்று வரை சரியாக கிடைக்காமலேயே உள்ளது.
ரயில் பயணியர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இரட்டை ரயில் பாதை இன்று வரை அமைக்கப்படாமலேயே இருப்பதால், அன்றாடம் பாலுார், வாலாஜாபாத் ரயில் நிலையங்களில், எதிரே வரும் ரயிலுக்காக, மற்றொரு ரயில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
அடிப்படை வசதி இல்லை
மாவட்ட தலைநகரான காஞ்சிபுரத்தில், இரு ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த இரு ரயில் நிலையங்களிலுமே, குடிநீர், கழிப்பறை, நிழற்குடை என, எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது.
காலை, இரவு என 24 மணி நேரமும் கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால், மாற்றுத்திறனாளிகளும் அவதிப்படும் நிலை நீடிக்கிறது.
காஞ்சிபுரம் - சென்னை ரயில் பயணியர் சங்கத்தின் செயலர் ஜெ.ரங்கநாதன் கூறியதாவது:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம், ரயில் பயணியர் வாயிலாக ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைக்கிறது.
ஆனால், இன்று வரை இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். சென்னையின் புறநகர் பகுதியாக செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி, வேளச்சேரி,கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகள் உள்ளன.
ஆனால், சென்னையின் புறநகர் பகுதியாக, காஞ்சிபுரம் இல்லை. இதனாலேயே, இரட்டை ரயில் பாதை, கூடுதல் ரயில் சேவை போன்றவை கிடைக்காமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.