/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது
/
காஞ்சியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது
ADDED : ஜன 13, 2024 10:42 PM

காஞ்சிபுரம்:பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு, படையல் பொருட்களின் விற்பனை காஞ்சிபுரத்தில் களை கட்ட துவங்கியுள்ளது. பூக்களின் விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலும், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான, பொங்கல் பண்டிகை, நாளை துவங்கி,மாட்டுபொங்கல், காணும் பொங்கல் என, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளன.
பூ விலை உயர்வு
இந்த பண்டிகைகளை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், காய்கறிகள், வாசலில் வண்ண கோலமிட கலர் கோலமாவு என சந்தைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.
பண்டிகை விற்பனை களைகட்ட துவங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
பூக்களின் வரத்து குறைந்து உள்ளதால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் நேற்று பூக்களின் விலை அதிகரித்துள்ளன.
அதன்படி, மல்லிகைப்பூ, 2,500 ரூபாய்; முல்லை 2,000; காக்கட்டான் 1,200; ஜாதிமல்லி 1,400; கனகாம்பரம் 1,200, சம்பங்கி, 100; சாமந்தி 100; ரோஜா 120, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தாலும், பூக்கடை சத்திரத்தில் பூக்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், நெரிசலையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் ரயில்வே சாலையில் உள்ள காய்கறி கடைகளில் கூட்டம் அதிகமாக காண முடிகிறது. காய்கறிகளின் விலை, 20 - 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
காய்கறி
ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்; வெங்காயம் 35 ரூபாய்; உருளைக்கிழங்கு, 30 ரூபாய்; முள்ளங்கி 40 ரூபாய்; பீன்ஸ் 60 ரூபாய்; கேரட் 50 ரூபாய்; அவரைக்காய் 60 ரூபாய்; கத்தரிக்காய் 40 ரூபாய்; பீன்ஸ் 40 ரூபாய் ; கருணகிழங்கு 70 ரூபாய்; சேப்பங்கிழங்கு 80 ரூபாய், அதிகபட்சமாக முருங்கைக்காய் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விழுப்புரம், கடலுார், திருச்சி, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு பன்னீர் கரும்பு இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், 20 கரும்பு கொண்ட ஒரு கட்டு, 500 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 40 - -50 ரூபாய் வரை விற்கப்பட்டது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள்கொத்து, ஒரு கட்டு கொத்து மஞ்சள் 80 - -120 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 10- - 20 ரூபாய் வரை விற்கப்பட்டது.
விறகு அடுப்பில் பொங்கல் வைக்கும் மண் அடுப்பு, 250 - 350 ரூபாய்க்கும், மண்பானை சிறியது 120 ரூபாய்க்கும், பெரிய பானை 300 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வீட்டு வாசலில் வண்ண கோலமிடுவதற்கு, 50 கிராம் கலர் கோல மாவு ஒரு பாக்கெட் 5 ரூபாய்க்கும், 100 கிராம் 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
காய்கறி, பழம், பூ, மண்பானை, கலர் கோல மாவு மட்டுமின்றி பொங்கல் பண்டிகையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள காந்தி சாலை, ரயில்வே சாலை, ராஜ வீதி உள்ளிட்ட பகுதியில் நிரந்தர ஜவுளி கடைகளிலும், சீசன் நேர நடைபாதை மற்றும் தற்காலிக ஜவுளி கடைகளிலும் ஒரு வாரத்திற்கு மேலாக பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

