/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடையில் சேலை, கட்டட கழிவுகளால்... அதிருப்தி:அடைப்பை நீக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு
/
பாதாள சாக்கடையில் சேலை, கட்டட கழிவுகளால்... அதிருப்தி:அடைப்பை நீக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு
பாதாள சாக்கடையில் சேலை, கட்டட கழிவுகளால்... அதிருப்தி:அடைப்பை நீக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு
பாதாள சாக்கடையில் சேலை, கட்டட கழிவுகளால்... அதிருப்தி:அடைப்பை நீக்க முடியாமல் மாநகராட்சி தவிப்பு
ADDED : ஆக 02, 2025 12:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 50 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில், ஆயிரக்கணக்கான சட்ட விரோத பாதாள சாக்கடை இணைப்புகள் அதிகரித்துள்ளன. தவிர சேலை, செங்கல் உள்ளிட்ட கட்டட கழிவுகளை வீசுவதால், கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்ய முடிவதில்லை. இது போன்ற காரணங்களால், பாதாள சாக்கடை திட்டம், மாநகராட்சி முழுதும் பயனற்று போயுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன. இதில், 40 வார்டுகளில், 1978ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. 21,000 வீடுகளில் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
வீடுகளில் சேகரமாகும் கழிவுநீரை, நத்தப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி அனுப்ப, நகர் முழுதும் நான்கு உந்து நிலையங்களும், ஆறு, கழிவு நீரேற்று நிலையங்களும் இயங்கி வருகின்றன.
தனியார் நிறுவனம் வாயிலாக பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டம், மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேலாக மாநகராட்சி நிர்வாகம் செலவிடுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர மேற்கொள்ள முடியவில்லை என, மாநகராட்சி நிர்வாகம் மீது, நகர மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணமாக இருப்பவை, பாதாள சாக்கடையில் சட்ட விரோத இணைப்புகள் கொடுப்பது, குழாய்களில் கழிவுகளை வீசுவது.தவிர, 40 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாயில், கொள்ளளவைவிட மூன்று மடங்கு கழிவுநீர் செல்வதாலும், சிறிய தொழில் நிறுவனங்கள் சட்ட விரோத இணைப்புகள் மூலம் கழிவுநீரை வெளியேற்றுவதாலும், குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, சேலை, துணி, செங்கல் மற்றும் கட்டட கழிவுகள் உள்ளிட்ட அடைப்பு ஏற்படுத்தக்கூடிய திடப்பொருட்களை வீசுவதால், குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி, மாநகராட்சி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சட்டவிரோத பாதாள சாக்கடை இணைப்புகள், 40 வார்டுகளிலும் ஏராளமான எண்ணிக்கையில் பெருகிவிட்டன. அந்தந்த பகுதி கவுன்சிலர்களின் அதிகார துஷ்பிரயோகத்தால் இது அதிகரித்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள், இவற்றை கண்டுகொள்ளாததால், மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. பராமரிப்பு பணிகளை கவனிக்க வேண்டிய தனியார் நிறுவனமும், அது குறித்து அக்கறை காட்டுவதில்லை.
கழிவுநீர் குழாய்களை முறையாக பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் உள்ள குளறுபடிகளால், பாதாள சாக்கடை திட்டம் வீணாகி வருகிறது. மாநகராட்சிக்கு வரி செலுத்தி பாதாள சாக்கடை திட்டத்தை பயன்படுத்துவோர் நேரடியாக பாதிக்கின்றனர். 'பில்' கலெக்டர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என, மாநகராட்சியின் பல துறை அதிகாரிகள் குழுவாக இணைந்து, மாநகராட்சி முழுதும், சட்ட விரோத இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொறியாளர் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்ட விரோத பாதாள சாக்கடை இணைப்புகள் விஷயத்தில், மாநகராட்சியின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் இணைந்து தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'இதுபற்றி, மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்தால், சட்ட விரோத இணைப்பு உடனடியாக துண்டிக்கலாம்' என்றார்.
பாதாள சாக்கடை திட்டம் முழு அளவில் தோல்வியடைந்துள்ளது. அவற்றை மாநகராட்சி நிர்வாகிகள், பல ஆண்டுகளாகவே கவனிக்க தவறிவிட்டனர். பல இடங்களில் குழாய்கள் சேதமடைந்துள்ளன. சாலை முழுதும் கழிவுநீர் தேங்குகிறது. - கோ.ரா.ரவி, சமூக ஆர்வலர், சின்ன காஞ்சிபுரம்,
கழிவுநீர் குழாய்களில் கசடு, மணல், கற்கள் போன்றவற்றை, பொதுமக்கள் வீசுகின்றனர். பாதாள சாக்கடை குழாய்களில் கழிவுநீர் மட்டுமேவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. அவர்கள் இவ்வாறு வீசுவதால், கழிவுநீர் செல்வது தடைபட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே, இத்திட்டம் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். - எஸ்.சங்கர், நெசவாளர், காஞ்சிபுரம்