/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் செங்காடு ஊராட்சியில் கண் எரிச்சல், தண்ணீர் மாசு
/
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் செங்காடு ஊராட்சியில் கண் எரிச்சல், தண்ணீர் மாசு
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் செங்காடு ஊராட்சியில் கண் எரிச்சல், தண்ணீர் மாசு
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் செங்காடு ஊராட்சியில் கண் எரிச்சல், தண்ணீர் மாசு
ADDED : பிப் 13, 2025 12:55 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் வசிப்போர் விவசாயம், தொழிற்சாலை, கூலி வேலைக்கு செல்கின்றனர். இப்பகுதி வாசிகள் ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி கோவில் அருகே உள்ள வெங்கட்ராம ஐயர் குளத்தின் தண்ணீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குடிநீர் குளம் அருகே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ‛கால்கான்ஸ் இந்தியா' எனும் சில்வர் கோட்டிங் தொழிற்சாலை காரணமாக, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக, கிராம வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையில் இருந்து, சாம்பல் படிமங்கள் குளத்தில் கலந்து, குடிநீர் மாசடைந்து வருவதாக, கிராமவாசிகள் மற்றும் ஊராட்சி தலைவரும் புகார் தெரிவிக்கிறார்.
இந்த ஊராட்சியை சுற்றியுள்ள இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் நீட்சியாக, இந்த ஊராட்சியிலும் புதிதாக தொழிற்சாலை துவக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால், அப்பகுதி வாசிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், ஊராட்சி மன்ற கூட்டத்தில், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து காஞ்சிபுரம் கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். கடந்த 10ம் தேதி கலெக்டர் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திலும், செங்காடு ஊராட்சி தலைவர் அன்னக்கிளி புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செங்காடு கிராமவாசிகள் கூறியதாவது:
பல தலைமுறைகளாக இந்த குளத்தின் தண்ணீரை குடிக்கவும், சமையல் உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்த தொழிற்சாலை வந்த பின், தொழிற்சாலை புகையில் இருந்து வெளியேறும் சாம்பல் படிமங்கள், குளத்தின் தண்ணீரில் மேற்பரப்பில் படிகிறது.
இதனால், தண்ணீரில் எண்ணெய் படலம் போல் படர்கிறது. இந்த தண்ணீரை குடிப்பதால், வயிற்றுபோக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடைகளில் அதிக விலைக்கு பணம் கொடுத்து, குடிநீர் கேன் வாங்கும் நிலை உள்ளது. அதேபோல், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை காரணமாக, கண்ணெரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, இப்பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உ.அன்னக்கிளி
ஊராட்சி தலைவர்,
வெங்காடு.
அரசின் வழிகாட்டு நெறிமுறையின் படியை தொழிற்சாலை இயங்கி வருகிறது. சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, பொய்யான தகவலை மக்களிடையே பரப்பி, அதில் சுயலாபம் ஈட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால், புதிதாக தொழில் துவங்க நினைக்கும் நிறுவனங்கள் கலக்கம் அடைந்து வருகின்றன.
- தனியார் தொழிற்சாலை நிர்வாகம்,
வெங்காடு.

