/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியின் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு... தீர்வு!:பொன்னேரிக்கரையில் அமைக்க கலெக்டர் முடிவு
/
காஞ்சியின் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு... தீர்வு!:பொன்னேரிக்கரையில் அமைக்க கலெக்டர் முடிவு
காஞ்சியின் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு... தீர்வு!:பொன்னேரிக்கரையில் அமைக்க கலெக்டர் முடிவு
காஞ்சியின் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு... தீர்வு!:பொன்னேரிக்கரையில் அமைக்க கலெக்டர் முடிவு
ADDED : நவ 15, 2023 10:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பொன்னேரிக்கரையில் 14 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடப்பதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். மேலும், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இட தேர்வு பிரச்னைக்கு தீர்வாக அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலையம் வாயிலாக, பெங்களூரு, சென்னை மார்க்கமாக, கூடுதல் பேருந்து வசதி பயணியருக்கு கிடைக்கும்.
காஞ்சிபுரத்தில், 4 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் பேருந்து நிலையம் போதிய இடவசதி இல்லாததால், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய கட்டாயம் பல ஆண்டுகளாக உள்ளது.
மேலும், சென்னையிலிருந்து, வேலுார் மார்க்கமாக செல்லும் பெங்களூரு, தர்மபுரி, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் காஞ்சிபுரத்தில் இல்லாததால், புறநகர் பேருந்து நிலையம் அவசியம் ஏற்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது.
கீழ்கதிர்பூர், வெள்ளைகேட் உள்ளிட்ட இடங்களில் பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இட பிரச்னையால் பேருந்து நிலையம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தி.மு.க., ஆட்சி அமைந்ததும், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு,38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. ஆனால், இட தேர்வு பிரச்னை, இரு ஆண்டுகளாக நீடித்தது.
இந்நிலையில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம், பொன்னேரிக்கரை பகுதியில், அண்ணாதுரை நினைவு துாண் அருகே உள்ளது.
அந்த இடத்தில், 14 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதால், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.
அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில், பேருந்து நிலையத்துக்கு தேவையான இடத்தை கையகப்படுத்த, வருவாய் துறை சார்பில், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது.
வருவாய் துறையின் நோட்டீசுக்கு, அறக்கட்டளை நிர்வாகம் பதில் அனுப்புவார்கள் என, மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.
பொன்னேரிக்கரையில், தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால், பயணியருக்கு கூடுதல் வசதி கிடைக்கும். காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் போதிய பேருந்துகள் கிடைப்பதில்லை. புதிய பேருந்து நிலையம் அமைந்தால், சென்னைக்கு அதிக பேருந்து வசதி இருக்கும்.
அதேபோல, பெங்களூரு, வேலுார் போன்ற ஊர்களுக்கு தொடர்ந்து பேருந்துகள் கிடைக்கும். மேலும், சுற்றியுள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள், விடுதி, உணவகம் போன்ற வசதிகளும் அதிகரிக்கும்.
பொன்னேரிக்கரையில் இடம் தேர்வு செய்வதால், பிள்ளையார்பாளையம், பெரிய காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் ஆகிய பகுதிவாசிகள் எளிதாக அப்பகுதியை அடைய முடியும். நகர பேருந்து, ஷேர் ஆட்டோ வாயிலாக, புதிய பேருந்து நிலையத்தை அடைய முடியும்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன், அறக்கட்டளைக்கு அரசு வழங்கிய இடத்தை அவர்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். எனவே, பேருந்து நிலையத்துக்கு பயன்படுத்த அவர்களிடம் கேட்டுள்ளோம்.
அதற்கான நோட்டீசும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை பதில் கொடுத்தவுடன், நில நிர்வாக கமிஷனர் அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப்பி, ஒப்புதல் பெறப்படும்.
ஏற்கனவே, பேருந்து நிலையத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், விரைவில் பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணி நிமிர்த்தமாக நான் அடிக்கடி பெங்களூரு, ஓசூர் போன்ற இடங்களுக்கு செல்கிறேன். ஆனால், போதிய பேருந்துகள் இல்லாததால், வேலுார் சென்று அங்கிருந்து வேறு பேருந்து பிடித்து செல்ல வேண்டியுள்ளது. புதிய பேருந்து நிலையம் அமைந்தால், சென்னையிலிருந்து நேரடியாக பேருந்து வசதி கிடைக்கும் என, நினைக்கிறோம். பொன்னேரிக்கரையில் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் சிறப்பாக இருக்கும்.
- -எம்.சுரேஷ்,
பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.

