/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடு கட்டும் பணிகளை கண்காணிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: கட்டுமான தரத்திற்கு பயனாளிகளே பொறுப்பு
/
வீடு கட்டும் பணிகளை கண்காணிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: கட்டுமான தரத்திற்கு பயனாளிகளே பொறுப்பு
வீடு கட்டும் பணிகளை கண்காணிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: கட்டுமான தரத்திற்கு பயனாளிகளே பொறுப்பு
வீடு கட்டும் பணிகளை கண்காணிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: கட்டுமான தரத்திற்கு பயனாளிகளே பொறுப்பு
ADDED : டிச 22, 2024 08:17 PM
காஞ்சிபுரம்:வீடு கட்டுமான பணிகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தரமான கட்டுமான பணிகளுக்கு, பயனாளிகளே பொறுப்பேற்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம், கலைஞரின் கனவு இல்லம், பழங்குடியினத்தவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வீடு கட்டும் திட்டங்களை, ஊரக வளர்ச்சி துறையினர் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு வீடு கட்டும் திட்டத்திலும், பயனாளிகளே நேரடியாக அவரவருக்கு ஒதுக்கீடு செய்த வீடுகளை கட்டிக் கொள்ளலாம். நான்கு தவணைகளாக, அவரவரின் வங்கி கணக்கிற்கு பணம் விடுவிக்கப்படும்.
வீடு கட்ட முடியாதவர்களுக்கு உதவுவோர் என, அழைக்கப்படும் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பயனாளிகள் வீடுகளை கட்டிக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு வழங்கப்படும் பணம், நேரடியாக பணி ஒப்பந்தம் எடுத்தவருக்கு வழங்காமல், அந்தந்த பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் வழங்கப்படும். அந்த பணத்தை, பணி ஒப்பந்தம் எடுத்தவரிடம், பயனாளிகள் வழங்க வேண்டும்.
அதன்பின், பணி ஒப்பந்தம் எடுத்தவர், வீடுகளை கட்ட துவங்குவர் என, பணி ஒப்பந்தம் எடுத்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபரம் தெரிந்த பயனாளிகள் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அவர்களாகவே கட்டிக் கொள்கின்றனர். வீடு கட்டுவதற்கு கூடுதலாக பணம் செலவானாலும் அதை கண்டுகொள்வதில்லை.
உதவுவோர் மூலமாக வீடு கட்டும் போது, பயனாளிகளிடம் கூடுதலாக பணம் கேட்டால், எங்களிடம் ஒன்றுமில்லை. அரசு ஒதுக்கிய நிதிக்கு ஏற்ப வீடுகளை கட்டிக்கொடுங்கள் எனக் கூறிவிடுகின்றனர்.
அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி, வீடு கட்டுவதற்கு ஏற்ப நிதி இல்லை என, வீடு கட்டும் பயனாளிகள் மற்றும் பணி ஒப்பந்தம் எடுத்தவர்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
பணி ஒப்பந்தம் எடுத்தவர்களும், பயனாளிகளிடம் இருந்து கூடுதல் பணம் பெற முடியாது என, அரசு வழங்கும் நிதியை பயன்படுத்தி, தரமில்லாத கட்டுமான பணிகளை செய்து விடுகின்றனர்.
பயனாளிகள் புதிய வீடுகளில் வசிக்க துவங்கிய பின், மேற்கூரை சிமென்ட் பூச்சு உதிர்வு, தரைத்தளம் சேதம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதை கண்காணிக்க வேண்டிய பணி மேற்பார்வையாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு ஊரக வளர்ச்சி உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். இதன் காரணமாக, இவர்கள் பயனாளிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
பணி துவக்கப்படாத பயனாளிகளின் விபரம் சேகரித்து, தங்களுக்கு வேண்டிய பணி ஒப்பந்ததாரர் வாயிலாக வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.
ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பொறுத்தவரையில், எந்த ஒரு கட்டுமான வேலையும் பாதிக்க கூடாது என, ஒப்பந்தம் எடுத்தவர் வாயிலாக அவசர அவசரமாக கட்டுமான பணிகளை முடித்து விடுகின்றனர்.
புகார்கள் வரும் போது, நடவடிக்கைக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர்.
எனவே, அரசு திட்டங்களில் வீடு கட்டுவதற்கு, பயனாளிகள் அல்லாதோருக்கு ஒதுக்கீடு செய்யும் போது, குறிப்பிட்ட காலம் வரையில் பராமரிப்பு பணிகளும் சேர்த்து விட வேண்டும் என, எதிர்பார்ப்பு பயனாளிகள் இடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு ஒதுக்கீடு செய்யும் புதிய வீடுகளுக்கு, பயனாளிகள் வீடுகள் கட்ட முன் வருவதில்லை. இதுபோன்ற நபர்களுக்கு, உதவுவோர் மூலமாக வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம். இருந்தாலும், பயனாளிகள் வீடு கட்டி கொடுக்கும் பணிகளில் குறைபாடுகள் இருந்தால், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பொறியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.
தரமான வீடுகளை கட்டிக்கொள்ள ஆசைபடும் பயனாளிகள் கூடுதல் பணம் செலவழித்து, தரமான வீடுகளை கட்டிக் கொள்ளலாம். இதில், ஒப்பந்தம் எடுத்தவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.