/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு கிராமங்களில் அளவிடும் பணி துவக்கம்
/
பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு கிராமங்களில் அளவிடும் பணி துவக்கம்
பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு கிராமங்களில் அளவிடும் பணி துவக்கம்
பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு கிராமங்களில் அளவிடும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 10, 2025 12:50 AM

உத்திரமேரூர்:சென்னை - சேலம் இடையிலான பசுமை விரைவுச் சாலை திட்டத்திற்காக, சாலை அமைய திட்டமிட்டுள்ள உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் மீண்டும் அளவிடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை - சேலம் இடையிலான பசுமை விரைவுச் சாலை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு, 2018ல் அப்போதைய அ.தி.மு.க., அரசால் சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.
சேலத்தில் துவங்கி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை புறநகர் பகுதியான படப்பை வழியாக 277 கி.மீ., துாரத்திற்கு, 10,000 கோடி ரூபாய் செலவில் எட்டு வழிச் சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டது.
இச்சாலையால், சென்னை - சேலம் இடையிலான 340 கி.மீ., துாரத்தை 274 கி.மீ., துாரமாக குறைகின்ற வகையிலும், அதே போன்று பயண துாரம் 6 மணி நேரத்தில் இருந்து, 3 மணி நேரமாக குறைத்து பயணிக்கும் வகையிலும் சாலை அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இச்சாலை, உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் துவங்கி, சீட்டணஞ்சேரி, அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக மாவட்ட எல்லையான பெருநகர் கடந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் செல்கிறது.
இத்திட்டத்திற்காக, 2018ல், சாலை அமைய உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் நில அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்பணிகள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 90 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில், விவசாயிகள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சியினர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கான தமிழக அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.
அதை தொடர்ந்து இத்திட்டம் மூலம் விவசாயம் அதிகம் பாதிக்காத வகையிலும், அரசு நிலம் மற்றும் வனத்தையொட்டிய அதிக நிலங்கள் வழியாக இத்திட்டத்தை நிறைவேற்றவும், சுற்று வட்ட சாலை குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனால், எட்டு வழிச்சாலைக்கு பதிலாக சென்னை - சேலம் பசுமை விரைவுச் சாலை எனவும், 10 கோடி ரூபாய்க்கு பதிலாக 12 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இத்திட்டத்திற்காக ஏற்கனவே அளவிடும் பணிகள் செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் நில அளவீட்டு பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றிய வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எட்டு வழிச் சாலையின் பரப்பளவு தற்போது ஆறு வழிச்சாலை அளவிற்கானதாக குறைந்துள்ளது. இதனால், முந்தைய நில அளவீடுகளின் இடது மற்றும் வலது புறங்களின் நிலபரப்பை சற்று குறைத்து துல்லியமானதாக அளவிட வேண்டி உள்ளது.
அப்பணிகள் மேற்கொள்ளும் வகையிலான சிறப்பு தனி குழுவினர், கருவிகள் மூலம் அளவீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.