/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சத்து குறைபாடுள்ள 1,542 குழந்தைகளின் எண்ணிக்கை 907 ஆக...குறைந்தது! : மாவட்டத்தில் பாலுாட்டும் பெண்கள் 1,013 பேர் கண்காணிப்பு
/
சத்து குறைபாடுள்ள 1,542 குழந்தைகளின் எண்ணிக்கை 907 ஆக...குறைந்தது! : மாவட்டத்தில் பாலுாட்டும் பெண்கள் 1,013 பேர் கண்காணிப்பு
சத்து குறைபாடுள்ள 1,542 குழந்தைகளின் எண்ணிக்கை 907 ஆக...குறைந்தது! : மாவட்டத்தில் பாலுாட்டும் பெண்கள் 1,013 பேர் கண்காணிப்பு
சத்து குறைபாடுள்ள 1,542 குழந்தைகளின் எண்ணிக்கை 907 ஆக...குறைந்தது! : மாவட்டத்தில் பாலுாட்டும் பெண்கள் 1,013 பேர் கண்காணிப்பு
ADDED : பிப் 18, 2025 08:35 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 0 - 6 வயது வரையிலான, 62,000 குழந்தைகளில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்பட்ட 1,542 குழந்தைகளின் எண்ணிக்கை, ஓராண்டில் 907 ஆக குறைந்துள்ளது. சத்து குறைபாடுடன் காணப்படும் கைக்குழந்தைகள் மற்றும் 1,013 பாலுாட்டும் பெண்களை தொடர்ந்து கண்காணிப்பதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் வாயிலாக, குழந்கைள், வளர் இளம் பெண்கள், பாலுாட்டும் பெண்கள், கர்ப்பிணியர் உள்ளிட்டோர் கண்காணிக்கப்படுகின்றனர். இதில், குழந்தைகளை கண்காணிப்பது, அவர்களை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட பணிகள், அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு சவாலான ஒன்றாக உள்ளது.
அவ்வாறு, ஊட்டச்சத்து குறைவாக உள்ள ஏராளமான குழந்தைகள், அங்கன்வாடி மையங்களுக்கு வருகின்றனர். அவர்களை கண்காணித்து ஊட்டச்சத்து மிக்க இயல்பான குழந்தைகளாக மாற்ற போராட வேண்டியிருப்பதாக, அங்கன்வாடி மைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்குழந்தைகள் மட்டுமல்லாமல், 0 - 6 மாதமே ஆன, பாலுாட்டும் பெண்கள் வைத்திருக்கும் கைக்குழந்தைகளையும் அங்கன்வாடி மையம் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. இந்த குழந்தைகளையும் கண்காணித்து, அவர்களின் தாய்க்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இத்திட்டத்தில், எடை குறைவாகவோ அல்லது ஊட்டச்சத்து குறைவாகவோ குழந்தைகள் இருப்பது தெரியவந்தால், திட்டத்தின் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின், முட்டை, கடலை மிட்டாய், சத்துமாவு போன்றவை கூடுதலாக வழங்கி, அவர்களை இயல்புநிலைக்கு கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள், இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 940 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் அமைந்துள்ள பகுதியில், 0 - 6 வயது வரை, 62,619 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களை அங்கன்வாடி மைய ஊழியர்கள் கண்காணித்ததில், 2024 ஜனவரி மாதம், 1,542 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதில், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஒன்றியங்களில் மட்டும் 822 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான செறிவூட்டப்பட்ட பிஸ்கட், சத்துமாவு, வைட்டமின் திரவம், முட்டை போன்ற உணவுகள் சற்று கூடுதலாக வழங்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
ஓராண்டு கழித்து, 2025 ஜனவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 635 குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முந்தைய கலெக்டர் ஆர்த்தி பணியாற்றியபோது, சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற வண்ணங்களில், குழந்தைகளின் ஊட்டச்சத்து அடிப்படையில் அட்டைகள் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி இயல்பு நிலைக்கு குழந்தைகள் வரும்போது, பெற்றோருக்கு பச்சை அட்டை வழங்கப்பட்டன.
இதுபோன்ற நடவடிக்கைகளும் முந்தைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. தற்போது குழந்தைகள் பற்றிய அனைத்து தரவுகளும் ஆன்லைனில் பராமரிக்கப்படுகின்றன.
அதேபோல், 0-6 மாதம் வரையிலான கைக்குழந்தைகளை கண்காணித்ததில், 1,013 குழந்தைகள் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்காதவர்களாக இருந்துள்ளனர்.
பாலுாட்டும் பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால், குழந்தைகளுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்பதால், ஊட்டச்சத்து பெட்டகங்கள் அரசு சார்பில் தாய்க்கு வழங்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், வீட்டிலேயே சத்தான உணவு முறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு, ஓராண்டு கண்காணிக்கப்பட்டதில், 1,013 குழந்தைகளில், 874 குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படும் 139 குழந்தைகளை, இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி கூறியதாவது:
வயதுக்கு ஏற்ப எடையும், உயரத்துக்கு ஏற்ற எடையும், வயதுக்கு ஏற்ற உயரமும் இல்லாத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக அடையாளம் காண்கிறோம். இவர்களுக்கு தேவையான புரோட்டின், முட்டை, வைட்டமின் திரவம் போன்றவை அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகின்றன.
குழந்தைகள் மட்டுமல்லாமல், பாலுாட்டும் பெண்களும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் குழந்தைகள் பலர் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுடன் இருந்துள்ளனர். உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து, அவர்களுக்கு தேவையான இணை உணவு போன்றவை வழங்கி, பெரும்பாலான குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
மீதமுள்ள குழந்தைகளையும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம். மாவட்டம் முழுதும் 5,696 பாலுாட்டும் பெண்கள் உள்ளனர். இதில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,013 பெண்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.--------------