/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் குளங்கள் நிரம்புவதில் தொடரும் சிக்கல் கால்வாய்களை கோட்டை விட்ட மாநகராட்சி
/
கோவில் குளங்கள் நிரம்புவதில் தொடரும் சிக்கல் கால்வாய்களை கோட்டை விட்ட மாநகராட்சி
கோவில் குளங்கள் நிரம்புவதில் தொடரும் சிக்கல் கால்வாய்களை கோட்டை விட்ட மாநகராட்சி
கோவில் குளங்கள் நிரம்புவதில் தொடரும் சிக்கல் கால்வாய்களை கோட்டை விட்ட மாநகராட்சி
ADDED : பிப் 05, 2025 12:28 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் கோவில் குளங்கள், குட்டைகள், ஏரிகள் என, 44 நீர்நிலை ஆதாரங்களாக உள்ளன. இதில், அல்லாபாத், ஓரிக்கை என, இரு ஏரிகள் அடங்கும். மாநகராட்சி எல்லையில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்றவை, மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளன.
அவற்றை சீரமைக்கவும், மழைநீரை கால்வாய்களில் கொண்டு செல்ல வழிவகை செய்யவும் சரியான நடவடிக்கை இல்லாததால், தற்போது வரை நீர்நிலைகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக, கோவில் அருகே உள்ள பெரும்பாலான குளங்களுக்கு முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாததால், ஆண்டுதோறும் பருவமழையின்போது பலத்த மழை பெய்தும், இக்குளங்கள் முழுமையாக நிரம்பாமல் உள்ளன.
நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக அமைக்கப்பட்ட இக்குளங்களுக்கு மழைநீர் வரும் கால்வாய், பராமரிப்பு இல்லாமல் துார்ந்து கிடப்பதாலும், மழைநீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து மறித்துவிட்டதால், ஆண்டுதோறும் தடம் மாறி செல்லும் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.
மங்களதீர்த்த குளம்
உதாரணமாக, காஞ்சிபுரம் மங்களேஸ்வரர் கோவில் அருகே உள்ள மங்கள தீர்த்த குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ல் 'பிரசாத்' திட்டத்தின் கீழ், 11.85 லட்சம் ரூபாய் செலவில் குளம் சீரமைக்கப்பட்டது. குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை முறையாக துார்வாரி சீரமைக்கவில்லை. இதனால், மங்களதீர்த்த குளம் முழுமையாக நிரம்புவதில்லை.
குமரகோட்டம்
குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் குளம் சீரமைக்கப்பட்டும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய் முறையாக இல்லாததால், இக்குளம் முழுமையாக நிரம்பி பல ஆண்டுகள் ஆகின்றன.
ரங்கசாமி குளம்
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், 2011ல், 23 லட்சம் ரூபாய் செலவிலும், 2018ல் மத்திய அரசின், 'பிரசாத்' திட்டத்தில், 25.39 லட்சம் ரூபாய் செலவிலும் சீரமைக்கப்பட்டது. இருப்பினும், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்கவில்லை. இந்த குளமும் நிரம்புவதில் சிக்கல் நீடிக்கிறது.
நகரீஸ்வரர் கோவில் குளம்
காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில் நகரீஸ்வரர் கோவில் குளத்து நீரை, 30 ஆண்டுகளுக்கு முன், குளத்து நீரை எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின், பராமரிப்பு இல்லாமல் குளம் சீரழிந்தது. 2002ல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் குளம் புதுப்பிக்கப்பட்டது. குளத்துக்கு மழைநீர் வர வேண்டிய கால்வாய் கட்டமைப்பு இல்லை.
அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளம்
அஷ்டபுஜ பெருமாள் கோவில், வளாகத்தில் கஜேந்திரபுஷ்கரணி என அழைக்கப்படும் தெப்பகுளம் உள்ளது. கும்பாபிஷேகத்தின் போது, துார்வாரி சீரமைக்கப்பட்ட இக்குளத்துக்கு தேவையான மழைநீர் வடிகால்வாய் இல்லை. அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக சற்று நிரம்புகிறது. ஆனால், முழுமையாக நிரம்புவதில்லை.
உலகளந்த பெருமாள் கோவில் குளம்
உலகளந்த பெருமாள் கோவில் குளம் சீரமைக்கப்பட்டு இருந்தாலும், குளத்திற்கு மழைநீர் வரும் வகையில், முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இக்குளம் நிரம்பி பல ஆண்டுகள் ஆகின்றன.
வைகுண்ட பெருமாள் கோவில் குளம்
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. குளத்திற்கு மழைநீர் வரும் அனைத்து கால்வாய்களும் சீரமைக்கப்படவில்லை. இதனால், இக்குளத்தில் தேங்கியுள்ள சிறிதளவு தண்ணீரும் பாசி படர்ந்த நிலையில் உள்ளது.
எனவே, கோவில்களின் பயன்பாட்டிற்கும், கோவிலை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்கும் நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கும் குளங்களை துார்வாரி, குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் விரிவான திட்டம் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என, நகராவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.