/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேயர் - கவுன்சிலர்கள் இடையேயான உறவில்...சுமுகம்!:'டிமான்ட்' பூர்த்தியாவதால் முடிவுக்கு வந்த பிரச்னை
/
மேயர் - கவுன்சிலர்கள் இடையேயான உறவில்...சுமுகம்!:'டிமான்ட்' பூர்த்தியாவதால் முடிவுக்கு வந்த பிரச்னை
மேயர் - கவுன்சிலர்கள் இடையேயான உறவில்...சுமுகம்!:'டிமான்ட்' பூர்த்தியாவதால் முடிவுக்கு வந்த பிரச்னை
மேயர் - கவுன்சிலர்கள் இடையேயான உறவில்...சுமுகம்!:'டிமான்ட்' பூர்த்தியாவதால் முடிவுக்கு வந்த பிரச்னை
ADDED : ஜன 16, 2025 07:20 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் இடையே, ஓராண்டாக பிரச்னை நீடித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே சுமுக உறவு ஏற்பட்டுள்ளது. அதிருப்தியில் இருந்த கவுன்சிலர்களுடன் சேர்ந்து, மேயர் மகாலட்சுமி பொங்கல் விழாவை சிறப்பித்ததை தொடர்ந்து, 2025ல் நடைபெறும் மாநகராட்சி கூட்டங்கள் பிரச்னையின்றி நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயராக, தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி உள்ளார். மொத்தமுள்ள 51 வார்டுகளில், 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, கடந்த ஆண்டு போர்க்கொடி உயர்த்தினர்.
தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பாஜ., - பாமக என, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பிரச்னை செய்தனர்.
ஜனவரியில் துவங்கிய எதிர்ப்பு, லோக்சபா தேர்தல் முடிந்த உடன் மேலும் வலுவடைந்தது. மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டு, கவுன்சிலர்கள் பெரும் பிரச்னை செய்தனர்.
கலெக்டர், அமைச்சர், நகராட்சி இயக்குனர் அலுவலகம், அண்ணா அறிவாலயம் என, அனைத்து இடங்களிலும், மேயருக்கு எதிராக மனு அளித்தனர்.
இதற்கிடையே, கோவை, நெல்லை மேயர்களின் பதவிகளை, தி.மு.க., மேலிடம் பறித்ததால், காஞ்சிபுரம் மேயர் பதவியும் பறிபோகும் என்ற பேச்சுகள் அதிகமாகின. ஆனால், காஞ்சிபுரம் மேயர் பதவியில் மகாலட்சுமி தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில், ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், எந்த கவுன்சிலர்களும் பங்கேற்காததால், தீர்மானம் தோல்வியடைந்தது.
இதனால், மேயர் பதவியை மகாலட்சுமி தக்கவைத்துக் கொண்டார். அடுத்து, செப்டம்பரில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை எதிர்ப்பு கவுன்சிலர்கள் நடத்தினர். அன்றயை கூட்டத்தில், விவாதம் இன்றி தீர்மானம் நிறைவேற்றியதாக, இரு கவுன்சிலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தொடர்ந்து, நவம்பரில் நடந்த மாநகராட்சி கூட்டம், யாரும் எதிர்பாராத வகையில், 3 மணி நேரம் நீடித்தது.
அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தில், தங்கள் வார்டு பிரச்னைகளை பேசினர். கடந்த கூட்டத்தில் விவாதம் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தததால், நவம்பரில் நடந்த கூட்டத்தில், அனைத்து கவுன்சிலர்களும் வார்டு பிரச்னைகள் மற்றும் பொது பிரச்னைகளை முன்வைத்து பேசினர். எதிர்ப்பு கவுன்சிலர்கள், கடும் எதிர்ப்போ அல்லது பிரச்னையோ செய்யவில்லை.
இந்த கூட்டம் முடிந்த பின் தான், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையேயான உறவு, மெல்ல சுமுகமான நிலையை அடைந்தது.
எதிர்ப்பு கவுன்சிலர்களை மேயர் தரப்பு சமாளித்த காரணத்தால், அடுத்தடுத்த நாட்களில் பெரிய அளவிலான பிரச்னைகளோ, நெருக்கடியோ மேயருக்கு கவுன்சிலர்கள் கொடுக்கவில்லை.
எதிர்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களிடம் கூட, பெரிய அளவிலான எதிர்ப்புகள் இல்லை.
இந்நிலையில், நான்காவது மண்டலத்தில் நடந்த பொங்கல் விழாவில், மேயர் மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவருடன், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்று, பொங்கல் விழாவை சிறப்பித்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில், மேயர் மற்றும் கவுன்சிலர்களுடனான நடவடிக்கைகள், 2025ல் பிரச்னை இன்றி நகரும் என, இதுபோன்ற செயல்பாடுகள் வாயிலாக தெரியவருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் தி.மு.க.,வினர் கூறியதாவது:
மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையயோன பிரச்னை, 2024ம் ஆண்டை போல், 2025ல் இருக்காது. நவம்பர் மாதம் வரை இருந்த பிரச்னை, டிசம்பர், ஜனவரியில் வெகுவாக குறைந்துவிட்டது.
தி.மு.க., கவுன்சிலர்களுக்கு மேலிடம் கொடுத்த எச்சரிக்கை தான், கவுன்சிலர்கள் அமைதியானதற்கு காரணம்.
அடுத்தபடியாக, மேயர் தரப்பும், அதிருப்தி கவுன்சிலர்களுக்கான 'டிமான்ட்' என்ன என்பதை கேட்டு, அவற்றை பூர்த்தி செய்து வருகிறது.
இதனால், அதிருப்தி கவுன்சிலர்கள் பிரச்னை செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டனர். அதிருப்தியில் இருந்த எதிர்க்கட்சி கவுன்சிலர்களும், மேயரிடம் பேசி வருகின்றனர்.
கவுன்சிலர்களின் அதிருப்தியை சரிக்கட்டியதில், மேயரின் கணவர் யுவராஜுக்கு முழு பங்கு உள்ளது.
மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என, அதிருப்தி கவுன்சிலர்களுக்கு நன்றாக தெரியும். 2026 வரை மேயராக மகாலட்சுமி தான் தொடர்வார் என்பதால், பிரச்னை செய்யாமல், தேவையை கேட்டு பெறவே கவுன்சிலர்கள் நினைக்கின்றனர்.
துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவு, மேயர் தரப்புக்கு இருப்பதால், 2026 வரை மேயரை மாற்ற முடியாது என்ற கள நிலவரத்தை கவுன்சிலர்கள் உணர்ந்துள்ளனர்.
மேயருடன் சுமுகமான உறவை தொடர்ந்தால் மட்டுமே, வார்டு பிரச்னையை சரிசெய்து, 2026ல் மக்களிடம் ஓட்டு கேட்க முடியும்.
அதனால், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே, ஓராண்டு நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக கள நிலவரம் தெரிவிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.