/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விமானத்தில் கோளாறு சுற்றுலா பயணியர் அவதி
/
விமானத்தில் கோளாறு சுற்றுலா பயணியர் அவதி
ADDED : ஏப் 30, 2025 12:17 AM
சென்னை,ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இருந்து சென்னைக்கு, 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் விமானம் 192 பேருடன், நேற்று அதிகாலை 4:15 மணிக்கு வந்தது.
இதே விமானம், மீண்டும் காலை 5:05 மணிக்கு அபுதாபிக்கு புறப்படுவது வழக்கம். இதில் பயணம் செய்ய 182 பயணியர், 'புக்கிங்' செய்திருந்தனர். அவர்கள் அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் அமர்ந்தனர். விமானம் 'ரன்வே'யில் ஓடத் துவங்கிய போது, திடிரென தொழில்நுட்ப கோளாறு ஏறப்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டு காலை 7:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
நேரம் கடந்தும் விமானம் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆத்திரமடைந்த பயணியர், விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின், விமான நிலைய ஓய்வு அறை பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர் குழு முயற்சித்தும், விமான கோளாறை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணியர் அனைவரும் விமான நிறுவனம் ஏற்பாடு செய்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு செல்லும் எனக் கூறப்படுகிறது.
***

