/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 45 ஆண்டாக போக்குவரத்து போலீசார்... 10 பேர் மட்டுமே 57 சிக்னல்களில் 56 பழுதாகி முடங்கியதால் சிக்கல்
/
காஞ்சியில் 45 ஆண்டாக போக்குவரத்து போலீசார்... 10 பேர் மட்டுமே 57 சிக்னல்களில் 56 பழுதாகி முடங்கியதால் சிக்கல்
காஞ்சியில் 45 ஆண்டாக போக்குவரத்து போலீசார்... 10 பேர் மட்டுமே 57 சிக்னல்களில் 56 பழுதாகி முடங்கியதால் சிக்கல்
காஞ்சியில் 45 ஆண்டாக போக்குவரத்து போலீசார்... 10 பேர் மட்டுமே 57 சிக்னல்களில் 56 பழுதாகி முடங்கியதால் சிக்கல்
ADDED : ஜூன் 02, 2025 10:47 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, பிரதான சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்ட 57 சிக்னல்களில் 56 சிக்னல் பயன்பாடு இன்றி முடங்கியுள்ளன. மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை இருப்பதால், நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரத்தில், 45 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து காவல் நிலையம் துவக்கப்பட்டபோது, அப்போதைய வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு போக்குவரத்து சப் - இன்ஸ்பெக்டர், ஒன்பது போக்குவரத்து போலீசார் என, 10 பேர் நியமிக்கப்பட்டனர்.
அப்போது, பெரிய அளவில் வாகன நெரிசல் இல்லை. தற்போது, காஞ்சிபுரம் மாநகராட்சியாக இருப்பதோடு, ஏராளமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
முடக்கம்
தவிர, காஞ்சிபுரத்தில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல லட்சங்களாக உயர்ந்துள்ளன. ஆனால், அதற்கேற்ப போக்குவரத்து போலீஸ் பணியிடம் அதிகரிக்கவில்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள வாகன போக்குவரத்து மற்றும் சாலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க வேண்டும்.
ஆனால், காஞ்சிபுரத்தில் மூன்று சிறப்பு காவல் ஆய்வாளர் மூன்று பேர், ஏழு போக்குவரத்து போலீசார் என, 10 பேர் மட்டுமே உள்ளனர். 45 ஆண்டுகளாக 10 பேருக்கு மேல் போக்குவரத்து போலீசாரை நியமிக்கவில்லை; போக்குவரத்து ஆய்வாளர் பணியிடமும் காலியாக உள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தவிர, காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலை சந்திப்புகளான ஓரிக்கை, செவிலிமேடு, இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், பூக்கடை சத்திரம், சங்கரமடம், செங்கழுநீரோடை வீதி, ஆடிசன்பேட்டை, ரங்கசாமிகுளம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் 57 தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டன.
இதில் இரட்டை மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு சிக்னல் மட்டுமே முழுமையாக இயங்குகின்றன. மற்ற 56 சிக்னல்கள் செயல்படாமல் முடங்கியுள்ளதால், காலை, மாலை நேரங்களில், பிரதான சாலை சந்திப்புகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிறப்பு காவல் படை
குறிப்பாக, விடுமுறை, முகூர்த்தம், திருவிழா, பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் காஞ்சிபுரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால், பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் பயன்பாடின்றி வீணாகும் சிக்னல்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, போக்குவரத்து காவல் துறைக்கு கூடுதல் போலீசாரை நியமித்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம்போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ப.ராஜூ கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் உள்ள பழுதடைந்த சிக்னல்களை பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு காவல் படை போலீசார் வாயிலாக நெரிசலுக்கு தீர்வு காண்கிறோம்.
கோடை விடுமுறைக்குப்பின், பள்ளி திறந்துள்ள நிலையில், முக்கிய சாலை சந்திப்புகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல்ஏற்படாமல் இருக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான சிக்னல்கள் பழுதடைந்து காட்சி பொருளாக மாறியுள்ளது. இங்கு போலீசார் இல்லாத நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால், காலையில் பணிக்கு செல்வோர் மட்டுமின்றி மாணவ - மாணவியரும் பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர்.
எனவே, பழுதடைந்த தானியங்கி சிக்னல்களை சீரமைக்க வேண்டும். காமாட்சியம்மன் கோவில், உலகளந்தார் பெருமாள் மாட வீதி, ரயில்வே சாலையுடன், திருச்சக்கரபுரம், பி.எஸ்.கே., தெரு இணைமயும் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.
டி..ராமச்சந்திரன்,
கார் வாகன ஓட்டுநர்,
காஞ்சிபுரம்.