/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரும்புலியூர் குளக்கரையை சீரமைக்க வலியுறுத்தல்
/
அரும்புலியூர் குளக்கரையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2025 12:18 AM

அரும்புலியூர்: அரும்புலியூர், பெரிய குளக்கரையில் சீமை கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமம், திடீர் நகரில், 5 ஏக்கர் பரப்பில் பெரியக்குளம் என்ற பெயரில் பொதுக்குளம் உள்ளது. இதன் அருகே, கங்கையம்மன் மற்றும் படவேட்டம்மன் கோவில்கள் உள்ளன.
மேலும், இக்குளத்தைச் சுற்றி, பல ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த விவசாய நிலங்களுக்கு இக்குளம் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
மேலும், இந்த குளத்தில் ஆண்டுதோறும் மீன் குத்தகைக்கு விடப்பட்டு ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்துதல் வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்த குளக்கரை மீது சீமை கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளதோடு, குளத்தின் கரை மீது குப்பை கொட்டியும், கால்நடை தீவனம் வைக்கோல் குவித்தும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக குளம் துார் வாராமல் உள்ளது.
எனவே, அரும்புலியூர் பெரிய குளக்கரையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும்.
குளத்தை துார் வாரி குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

