/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர்மண்டிய சுகாதார வளாகம் சீரமைக்க வலியுறுத்தல்
/
புதர்மண்டிய சுகாதார வளாகம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2024 12:35 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, அல்லாபாத் ஏரி அருகில் உள்ள நேதாஜி நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக கடந்த 1999ம் ஆண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிப்பறை, குளியல் அறை, துணி துவைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது.
அப்பகுதிவாசிகள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீரை பூர்த்தி செய்வதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.
பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க அப்பகுதிவாசிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் மின்மோட்டார் சீரமைக்கப்படவில்லை. இதனால், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் புதர்மண்டி வீணாகி வருகிறது.
எனவே, லட்சகணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு வீணாகும் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேதாஜி நகர் வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.