/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரத்தில் கேட்பாரற்ற நடுகல்லை பாதுகாக்க வலியுறுத்தல்
/
பழையசீவரத்தில் கேட்பாரற்ற நடுகல்லை பாதுகாக்க வலியுறுத்தல்
பழையசீவரத்தில் கேட்பாரற்ற நடுகல்லை பாதுகாக்க வலியுறுத்தல்
பழையசீவரத்தில் கேட்பாரற்ற நடுகல்லை பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : டிச 01, 2024 01:03 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மலை மீது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு செல்லும் பாதையில், மலைக்குன்றில் நடுகல் ஒன்று உள்ளதை, தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த வெற்றிதமிழன் குழுவினர், 2 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்தனர்.
அதை பாதுகாத்து பராமரிக்க வலியுறுத்திய அக்குழுவினர், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இதுகுறித்து அச்சமயம் மனு அளித்தனர். எனினும், இதுவரை அந்த நடுகல் கேட்பாரறற்று அதே இடத்தில் இருப்பது, வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இதுகுறித்து, தமிழர் தொன்மத்தைச் சேர்ந்த வெற்றிதமிழன் கூறியதாவது:
பழையசீவரம் பகுதியில் கண்டறியப்பட்ட இந்த நடுகல்லில், இரு வீரர்களின் உருவத்துடன், தலைக்கு மேற்பகுதியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இரு வீரர்களும் ஒரேக் குழுவை சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது.
பெரும்பாலான நடுகற்கள், ஆற்றங்கரை, பெருவழிப்பாதை, குன்றின் அடிவாரம், சன்னிதிகள் மற்றும் பாலை நிலப் பகுதிகளில் காணப்படும். கி.மு., நான்காம் நுாற்றாண்டு முதல், நடுகற்களில் எழுத்து பொறிப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில், எழுத்து பொறிப்புடன்கூடிய இந்த நடுகல்லானது, மிகவும் பழமையானதாக இருக்கக்கூடும். பழையசீவரம் பகுதியில் கண்டெடுத்த நடுகல்லில் உள்ள சிற்பத்தில், வீரர்கள் கையில் உள்ள ஆயுதங்களை வைத்து பார்க்கும்போது, அவர்கள் போர்த்திறமை மிக்கவர்களாக இருப்பர் என, கணிக்க முடிகிறது.
பழையசீவரத்தில் கேட்பாரற்று கிடக்கும் இந்த நடுகல்லை வருவாய் துறையினர் மீட்டு, தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனினும் கண்டுகொள்ளாமல் உள்ளது.
எனவே, இந்த நடுகல்லை முறையாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

