/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நெசவாளர்கள் நூதன போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்
/
காஞ்சியில் நெசவாளர்கள் நூதன போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்
காஞ்சியில் நெசவாளர்கள் நூதன போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்
காஞ்சியில் நெசவாளர்கள் நூதன போராட்டம் நெசவு கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தல்
ADDED : பிப் 19, 2025 01:23 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பருத்தி, பட்டு நெசவுக்கான கூலி இதுவரை, சங்க அலுவலகத்தில் ரொக்கமாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு கூலியை வங்கியில் வரவு வைக்க கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக, கைத்தறி துறை துணை இயக்குனர் மணிமுத்து, அனைத்து சங்கங்களுக்கும், நெசவு கூலி பற்றிய அறிவிப்பு கடிதங்களை அனுப்பியுள்ளார். நெசவு கூலியை வங்கியில் செலுத்த உள்ளதால், நெசவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தங்களது நெசவு கூலியை, ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் மட்டுமல்லாமல், கைத்தறி சங்க நிர்வாகிகளும் வலியுறுத்துகின்றனர். இதுசம்பந்தமாக, கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், ரொக்கமாக கூலி வழங்குவதை உறுதிசெய்ய, பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், நெசவாளர்கள் என, ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் கீரை மண்டபத்தில் இருந்து, கைகளில் தட்டு ஏந்தியபடி, நெசவு உபகரணங்களுடன் நெசவாளர்கள் துணை இயக்குனர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.
துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் ஏராளமானோர் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். கூலியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி மனு அளித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடந்ததால், கைத்தறி துறை துணை இயக்குனர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதையடுத்து, 'கூலியை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, துணை இயக்குனர் மணிமுத்து தெரிவித்ததை தொடர்ந்து, நெசவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதில், முக்கியமான நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.