/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 12 ஆண்டுகளுக்கு பின் மணல் குவாரி...துவங்குமா?: தமிழகத்தில் 13 புதிய இடங்களில் திட்டமிடும் அரசு
/
காஞ்சியில் 12 ஆண்டுகளுக்கு பின் மணல் குவாரி...துவங்குமா?: தமிழகத்தில் 13 புதிய இடங்களில் திட்டமிடும் அரசு
காஞ்சியில் 12 ஆண்டுகளுக்கு பின் மணல் குவாரி...துவங்குமா?: தமிழகத்தில் 13 புதிய இடங்களில் திட்டமிடும் அரசு
காஞ்சியில் 12 ஆண்டுகளுக்கு பின் மணல் குவாரி...துவங்குமா?: தமிழகத்தில் 13 புதிய இடங்களில் திட்டமிடும் அரசு
ADDED : ஜன 28, 2025 09:15 PM
காஞ்சிபுரம்:தமிழகத்தில் புதிதாக 13 இடங்களில் மணல் குவாரிகள் துவக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வரும் நிலையில், எம் - சாண்ட் விலை உயர்ந்து வரும் நிலையில், கட்டுமான பயன்பாட்டிற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 ஆண்டுகளுக்கு பின், புதிய மணல் குவாரி துவக்கப்படுமா என, வீடு கட்டும் ஏராளமானோர் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கிய மணல் குவாரிகளையே பெரிதும் நம்பியுள்ளன.
வேலுார், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட மணல் குவாரிகளில், 2023ல் நடந்த அமலாக்கத் துறையினரின் திடீர் ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் தற்போது வரை செயல்படாததால், கட்டுமானத்திற்கு தேவையான மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கட்டுமான பணிகள் அதிகம் நடக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தேவைப்படும் மணல் கிடைக்காமல், எம் - சாண்ட் மணலை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
தொழிற்சாலைகள் மிகுந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான யூனிட் மணல் கட்டுமானத்திற்கு தேவைப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மணல் கிடைக்காமல் வீடு கட்டுவோர் சிரமப்பட்டு வருகின்றனர்.
மணல் தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, 'எம் -- சாண்ட்' எனப்படும் செயற்கை மணல் வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. மணல் கிடைக்காததால், 'எம் -- சாண்ட்' விலையை மெல்ல உயர்த்துகின்றனர்.
ஒரு யூனிட் எம் -- சாண்ட் மணல் விலை, 3,500 - 4,200 ரூபாய் வரை, இடத்துக்கு ஏற்ப விற்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் எம் - சாண்ட் விலை மெல்ல உயரும் எனக் கூறப்படுகிறது.
இதனால், வீடு கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், மணல் குவாரிகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிய குவாரிகளில், அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதில், 4,730 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் மணல் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி உள்ள வேறு இடங்களில், புதிய மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என, கட்டுமான துறை, லாரி உரிமையாளர்கள் அமைப்புகளைச் சேர்ந்தோர், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, புதிய குவாரிகளை திறக்க நீர்வளத்துறை முன்வந்துள்ளது. இதற்காக, திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், திருச்சி, அரியலுார், புதுக்கோட்டை, கரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாமக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், கடலுார் ஆகிய, 13 மாவட்டங்களில், புதிய குவாரிகளுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு மற்றும் சர்ச்சையில் சிக்காத ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, குவாரி இயக்க அரசு திட்டமிட்டு வருகிறது. புதிய மணல் குவாரிகள் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம் இடம்பெற வேண்டும் எனவும், மணல் குவாரிகள் வாயிலாக, கட்டுமானத்திற்கு தேவையான மணலை, சரியான விலையில் அரசு வழங்க வேண்டும் என, வீடு கட்டுவோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2013ல் நடந்த மணல் குவாரி முறைகேடு தொடர்பாக, அப்போதைய கலெக்டர் சித்திரசேனன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரி திறக்கப்படவே இல்லை.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக, குவாரி இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குவாரியை துவக்கி, கட்டுமானத்திற்கு தேவையான மணலை விதிமுறைப்படி, குறைவான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், வீடு கட்டுவோர் ஏராளமானோர் எதிர்பார்த்துள்ளனர்.