/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் இழுபறியான 41 மின் திட்ட பணிகள்... துவங்கியது!:இரு ஆண்டுகளில் மொத்த பணி முடிக்க 'டெண்டர்'
/
காஞ்சியில் இழுபறியான 41 மின் திட்ட பணிகள்... துவங்கியது!:இரு ஆண்டுகளில் மொத்த பணி முடிக்க 'டெண்டர்'
காஞ்சியில் இழுபறியான 41 மின் திட்ட பணிகள்... துவங்கியது!:இரு ஆண்டுகளில் மொத்த பணி முடிக்க 'டெண்டர்'
காஞ்சியில் இழுபறியான 41 மின் திட்ட பணிகள்... துவங்கியது!:இரு ஆண்டுகளில் மொத்த பணி முடிக்க 'டெண்டர்'
ADDED : ஜன 05, 2025 07:42 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், மத்திய அரசு சார்பில், 70 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பாலான பணிகள் முடிக்காமல் இழுபறியாக உள்ளன. இதில், 41 நிலுவை பணிகளுக்கு தற்போது 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளில், வளர்ச்சி பணிகளை முடிக்க மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர், திருத்தணி ஆகிய நான்கு மின் பகிர்மான கோட்டங்கள் இயங்கி வருகின்றன. இதில், 54 துணை மின் நிலையங்களில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்பு மற்றும் வணிக மின் இணைப்புகள் உள்ளன.
குடியிருப்பு வீடுகள், வணிக நிறுவனங்களில் அதிக மின் நுகர்வு இருப்பதால், விவசாயத்திற்கு செல்லும் மின் சப்ளையில் அடிக்கடி துண்டிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில், விவசாய மின் இணைப்புகளால், வீடுகளில் உபயோகப்படுத்தும் மின் வினியோகத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், இரட்டை மின் மாற்றிகள் பிரித்தல், விவசாயத்திற்கு செல்லும் மின் பாதையை பிரித்து, விவசாயத்திற்கு என 49 பணிகளுக்கு, 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதியை, மூன்று நிதியாண்டுகளுக்கு தனித்தனி நிதியாக ஒதுக்கீடு செய்து பணிகள் துவக்கப்படும் என, மின்வாரியம் தெரிவித்திருந்தது. திட்டம் துவங்கி, மூன்று நிதியாண்டுகள் நிறைவு பெற்றும், எட்டு பணிகளை தவிர, மற்ற மின் வளர்ச்சி பணிகள் துவக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், விவசாயிகள் புலம்பி வந்தனர்.
குறிப்பாக, விவசாயத்திற்கு தனி மின்மாற்றி, இரட்டை மின்மாற்றி, பழைய மின் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மும்முனை மின் இணைப்பு சீராக வினியோகம் இல்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் வழித்தடத்தில், வீடுகள், வணிக மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. வீடுகளில் மின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், விவசாய மின் மோட்டார் பம்பு பழுதடைந்து விடுகிறது. தனி மின்பாதை ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வந்தோம்.
மத்திய அரசு, விவசாயத்திற்கு செல்லும் மின் வழித்தடத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, இரட்டை மின்மாற்றி அமைக்கப்படும் என, தெரிவித்தது. மூன்று ஆண்டுகளாகியும் மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் இன்னுமும் துவக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அதிகாரி கூறியதாவது:
அவசியமான முக்கிய இடங்களில், இரட்டை மின்மாற்றி அமைத்துள்ளோம். நிலுவை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் இருந்தது.
சமீபத்தில், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததின் அடிப்படையில், 41 நிலுவை பணிகளுக்கு, கடந்த ஜூன் மாதம் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கி, இரு ஆண்டுகளில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.