/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பில்லி சூனியம் எடுப்பதாக நகை மோசடி: பெண் கைது
/
பில்லி சூனியம் எடுப்பதாக நகை மோசடி: பெண் கைது
ADDED : ஆக 31, 2024 01:54 AM
நாகர்கோவில்:பில்லி சூனியம் பிரச்னைக்கு பரிகாரம் செய்வதாக ஏழு பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் முத்து மணிகண்டன். மனைவி தேவி லட்சுமி 38. இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் வசிக்கின்றனர். தேவி லட்சுமி வீடுகளுக்கு சென்று கைரேகை ஜோதிடம் பார்த்தார். இதில் மண்டைக்காடு புதூர் சி. எஸ். ஆர். நகரை சேர்ந்த ஜேசுபிரபா 65, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தனக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போவதாக தேவி லட்சுமியிடம் அவர் கூறினார்.
அதற்கு உங்கள் வீட்டில் பில்லி சூனியம் உள்ளதாகவும் அதற்கு பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஜேசு பிரபா பரிகார பூஜைக்கு சம்மதித்தார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்குச் சென்ற தேவி லட்சுமி பூஜைகளை தொடங்கினார்.
பூஜை செய்யும் போது கழுத்தில் நகை அணிந்திருக்கக் கூடாது என்று சொல்லி நகையை கழற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்த 50,000 ரூபாயை எடுத்து அந்த பாத்திரத்துக்குள் வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் தேவி லட்சுமி தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்க, அதை எடுப்பதற்காக ஜேசுபிரபா சமையல் அறைக்குச் சென்று திரும்பியபோது தேவி லட்சுமி மாயமாகி விட்டார். கூடவே பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை.
இது பற்றி ஜேசு பிரபா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் தேவி லட்சுமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.