/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
வன வறட்சியால் நீரை தேடி ஊருக்குள் யானைகள் உலா
/
வன வறட்சியால் நீரை தேடி ஊருக்குள் யானைகள் உலா
ADDED : பிப் 08, 2025 12:55 AM

நாகர்கோவில்:மழையின்றி கன்னியாகுமரி மாவட்ட காடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தாகம் தீர்க்க காட்டு யானைகள் கிராமப்பகுதிகளுக்கு வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு வனப்பகுதியில் யானைகள் அதிகமாக உள்ளன. சபரிமலை சீசன் காலத்தில், கேரள வனங்களில் உள்ள யானைகள் இங்கு வருவது வழக்கம். இம்மாவட்டத்தில் நான்கு மாதங்களாக மழை பெய்யாத நிலையில் வனத்தில் வறட்சி ஏற்பட்டு நீர்நிலைகள் வற்றிவிட்டன.
இதனால், தண்ணீருக்காக இங்குள்ள யானைகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளை நோக்கி வருகின்றன. நேற்று முன்தினம் மாலை, கோதையாறு அருகே மயிலார் பகுதியில் நான்கு யானைகள் வந்து தண்ணீர் குடித்து திரும்பின.
பின்னர் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் ரப்பர் மரக்கன்றுகளுக்கு ஊடுபயிராக பயிரிடப்பட்ட அன்னாசி பழங்களை சாப்பிட்டன. அச்சத்தால் அங்கிருந்த தொழிலாளர்கள் பதுங்கி இருந்தனர். பின்னர், அவை வனத்திற்கு சென்றன.