/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மகளை மணமுடித்து தருவதாக ரூ.18.50 லட்சம் மோசடி
/
மகளை மணமுடித்து தருவதாக ரூ.18.50 லட்சம் மோசடி
ADDED : ஏப் 11, 2025 02:27 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே சரல் உரப்பனவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 35; எலக்ட்ரீஷியன்.
கல்படி கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரது வீட்டுக்கு வேலைக்கு சென்றபோது, அவரது மகள் கார்த்திகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
ராமச்சந்திரன், தன் மகளை கிருஷ்ணகுமாருக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினார். தக்கலை அருகே குமாரகோவிலில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
கார்த்திகா நர்சிங் படிக்க பெங்களூரு சென்றார். அவரது படிப்பு செலவுக்காக கிருஷ்ணகுமார் பணம் அனுப்பி வந்துள்ளார். ராமச்சந்திரனின் குடும்பசெலவு, அவரது மனைவி சரோஜினி 47, மருத்துவ செலவு, மகன் கார்த்திக், 23, படிப்பு செலவு என, 18 லட்சத்து 50,000 ரூபாய் வரை, கிருஷ்ணகுமார் கொடுத்துள்ளார்.
திருமணம் பற்றி கிருஷ்ணகுமார் கேட்டபோது, ராமச்சந்திரன் திடீரென மறுத்துள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது, அதையும் கொடுக்கவில்லை. கிருஷ்ணகுமார் இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி, ராமச்சந்திரன், சரோஜினி, கார்த்திகா, கார்த்திக் ஆகியோர் மீது மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.