/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மாணவியை பலாத்காரம் செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது
/
மாணவியை பலாத்காரம் செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது
ADDED : ஜன 07, 2024 01:52 AM

நாகர்கோவில்:பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுந்தர்சிங் 32, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பல பெண்களுடன் அவரது ஆபாச சாட்டிங் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் இடலாக்குடி வட்டவிளை காமராஜர் தெருவை சேர்ந்த சுந்தர்சிங் பணிபுரியும் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பழகி அவருக்கு அலைபேசி வாங்கி கொடுத்துள்ளார். அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். சம்பவத்தன்று அழகப்பபுரத்தில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்ற மாணவியை காரில் வைத்து சுந்தர்சிங் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபோல பலமுறை அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவி தாயாரிடம் தெரிவித்தார். மாணவியின் தாயார் புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் சிங்கை கைது செய்தனர்.
சுந்தர்சிங்கிற்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். பத்து மாதங்களுக்கு முன் தான் அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். அவரது அலைபேசியை போலீசார் ஆய்வு செய்தபோது ஏராளமான பெண்களின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் உள்ளன. பெண்களிடம் வீடியோ காலில் பேசும்போது ஆடைகளை கழற்றக்கூறி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் வீடியோவில் உள்ள ஒரு பெண் ஆசிரியை எனவும் தெரிய வந்துள்ளது.