/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மதசார்பின்மை என்பது இடைச்சொருகல் வார்த்தை: கவர்னர் ரவி பேச்சு
/
மதசார்பின்மை என்பது இடைச்சொருகல் வார்த்தை: கவர்னர் ரவி பேச்சு
மதசார்பின்மை என்பது இடைச்சொருகல் வார்த்தை: கவர்னர் ரவி பேச்சு
மதசார்பின்மை என்பது இடைச்சொருகல் வார்த்தை: கவர்னர் ரவி பேச்சு
ADDED : செப் 23, 2024 02:12 AM

நாகர்கோவில்: ''மதசார்பின்மை என்ற வார்த்தை நம் அரசியல் சாசனத்தில் இடம்பெறவில்லை. சில தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காக இடைசொருகப்பட்ட வார்த்தை என கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபீடம் சார்பில் நடந்த வித்யாஜோதி, வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
வித்யாபீடம் தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் தலைமை விழா நடந்தது. பட்டங்களை வழங்கி கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஹிந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது. பாரதமும் ஹிந்து தர்மமும் பிரிக்க முடியாதது. ஆயிரம் ஆண்டுகளாக அயலாரின் ஆட்சியில் நம் தர்மத்தை அழிக்க முயற்சி செய்தார்கள். நம் சனாதன தர்மம் அழிக்க முடியாதது. சனாதன தர்மத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்கிறது. சனாதன தர்மம் அடிப்படையில் எளிமையானது. ஆனால் வெளியே தெரியும்போது சிக்கலானதாக தெரியும்.
பல தெய்வங்களை வழிபடுகிறோம். அதை வைத்து சிலர் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள். இந்த சிக்கலான விஷயம் தேவைதான். அப்போதுதான் விளக்கம் சொல்ல முடியும். பரமேஸ்வரன் ஒன்றுதான் என வேதத்தை தந்த ரிஷிகள் கூறினர். அனைத்து உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். அதனால்தான் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை தத்துவத்தை சார்ந்திருக்கிறோம். அனைத்து படைப்புகளிலும் பரமேஸ்வரன் பரிணமித்துக்கொண்டிருக்கிறார்.
நமக்கு பிடித்த இறை வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பது சனாதன தர்மம். வேறு எந்த மதமும் சொல்ல முடியாத எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்ற கருத்தை நாம் கூறுகிறோம். அதனால்தான் பாரதம் என்ற மிகப்பெரிய நாடு உருவானது. சனாதன தர்மம் என்பது மதம் அல்ல. வாழ்க்கை முறை. ஆங்கிலத்தில் தர்மம் என்ற சொல் கிடையாது. நம் அனைவரையும் ஒரே தர்மம் வழிநடத்துகிறது. அதன் அடிப்படையில்தான் பாரதம் உருவானது.
ஆயிரம் ஆண்டுகளாக சில புதியவர்கள் வந்தார்கள். அவர்கள் எங்கள் மதம்தான் சிறந்தது நீங்கள் இங்கே வரவேண்டும் எனச் சொன்னார்கள். கோயில்களை அழித்தார்கள். இப்படி அனைத்தையும் அழித்துக்கொண்டே வந்தனர். ஆனாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை. மகாபாரதம், பாகவதம், ராமாயணம், பகவத் கீதை ஆகியவை இந்தியா முழுவதும் பொது புனித நூல்களாக உள்ளன.
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சனாதன தர்மத்தை அழிக்க முயன்றார்கள். சுதந்திரத்துக்குப்பின் நம் தர்மம் எழுச்சிபெறும் என நினைத்தோம். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியில் அவர்களுடன் சேர்ந்து மிஷனரிகளும் வேலை செய்தார்கள். அப்போதுதான் சுவாமி விவேகானந்தர் அவதரித்தார். கன்னியாகுமரியில் தவம் செய்தார் சுவாமி விவேகானந்தர்.
பின்னர் சிகாகோவில் கர்ஜித்த சுவாமி விவேகானந்தர் பாரதம் வலிமையானதாக இருக்க வேண்டும். பாரதத்தில் இருப்பவர்கள் வலிமையானவர்களாக இருக்க வேண்டும் என்றார். அதன் பிறகுதான் பாரதம் எவ்வளவு பெரிய நாடு என உலகம் உணர்ந்து கொண்டது.
கடந்த பத்து ஆண்டுகளாக மத்தியில் சனாதான ஆட்சியில் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளோம். இன்னும் சிறிது காலத்தில் மூன்றாவது இடத்துக்கு வர உள்ளோம்.
உலக அளவில் மக்கள் தொகையிலும், வலிமையிலும் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இன்று அனைத்துக்கும் பாரதத்தை உலகம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. பிரச்னைகளுக்கு பாரதம் தீர்வு தரும் என நினைக்கிறார்கள். நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ளோம். 25 கோடி மக்களை வறுமைகோட்டுக்கு மேல் கொண்டுவந்துள்ளோம்.
பிரதமர் மோடி வேத மந்திரத்தின் பொருளைத்தான் எல்லோருக்குமாக, எல்லோருக்குமான வளர்ச்சி என வேத மந்திரத்தை சொல்கிறார். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை வசுதைவ குடும்பகம் என பிரதமர் கூறுகிறார். பாரதம் நாடு அல்ல. நம் தாய். நம் தேவி. பாரதத்துக்காக சேவை செய்ய வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.