கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் த.வெ. க. நிர்வாகி மீது வழக்கு
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் த.வெ. க. நிர்வாகி மீது வழக்கு
UPDATED : அக் 23, 2026 09:11 PM
ADDED : அக் 23, 2026 09:08 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் கல்லூரி முதுநிலை மாணவிக்கு லிப்ட் கொடுப்பது போல் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க., மத்திய செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் 40, மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இம்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நாகர்கோவில் தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இரு நாட்களுக்கு முன் மாலை 4:00 மணியளவில் தக்கலை அருகே பஸ்சுக்காக மாணவி மூலச்சலைச் சேர்ந்த த.வெ.க., பெண் நிர்வாகியுடன் நின்றார். அப்போது மருந்துக்கோட்டையைச் சேர்ந்த குமரி மாவட்ட த.வெ.க., மத்திய செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் காரில் வந்தார். பெண் நிர்வாகியை தெரியும் என்பதால் ஏன் இங்கு நிற்கிறீர்கள்? உங்கள் ஊர் வழியாகத்தான் செல்கிறேன் வாருங்கள் என அழைத்தார். பழக்கம் உள்ளவர் என்பதால் மாணவியையும் தன்னுடன் காரில் ஏற்றி புறப்பட்டார்.
பெண் நிர்வாகியை மூலச்சலில் இறக்கி விட்டு விட்டு, மாணவியிடம் குலசேகரம் தான் செல்கிறேன் உங்களை அங்கு இறக்கி விடுகிறேன் என அழைத்து சென்றார். வழியில் காரை நிறுத்திய கிறிஸ்டோபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். கோபமடைந்த மாணவியிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ்டோபர், பின் அவரது வீட்டின் அருகே இறக்கி விட்டு சென்றார்.
இதுகுறித்து மாணவி கொற்றியோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆனால் அங்கு வழக்கு பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் சமாதானமாக பேசி முடிக்கும் வகையில் பணப்பேரம் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து இந்த புகார் மீது விசாரணை நடத்த தக்கலை போலீசுக்கு எஸ்.பி., அன்சுல் நாகர் உத்தரவிட்டார். போலீசார் விசாரித்ததில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் நடந்தது உறுதியானதையடுத்து கிறிஸ்டோபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
