/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
அரசு சின்னம் மாயம்: பயணிகள் அதிர்ச்சி
/
அரசு சின்னம் மாயம்: பயணிகள் அதிர்ச்சி
ADDED : செப் 21, 2011 01:08 AM
புதுக்கடை: அரசு பஸ்களில் வழங்கும் டிக்கெட்டுகளில் அரசு சின்னம்
மாயமானதால் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.ஒவ்வொரு நாடும் கலாச்சாரத்தை
உயிர் நாடியாக கொண்டுள்ளது. எந்த நாடு தங்களுடைய கலாச்சாரத்தை இழக்கிறதோ
அந்த நாடு வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்று கூறலாம். இந்தியாவில் ஒவ்வொரு
மாநிலமும் ஒவ்வொரு அரசு சின்னத்தை கொண்டுள்ளது. தமிழக அரசு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக கொண்டுள்ளது.
தமிழக அரசு பாட புத்தகங்களிலும், ரேஷன் கார்டுகளிலும் அரசு
நிறுவனங்களிலும், அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும், அரசு வாகனங்களிலும்,
அரசு கட்டடங்களிலும் இந்த சின்னத்தை பொறித்து வைத்திருந்தனர். தமிழகத்தில்
அரசின் மிகப்பெரிய துறையாக போக்குவரத்து துறை உள்ளது. கிராம மக்கள்
பஸ்களில் நகரங்களை நோக்கி பயணம் செய்கின்றனர். இந்த பயணத்தில் அரசியல்
பேச்சு, நாட்டு நடப்புகள் குறித்த விவாதம் காரசாரமாக நடக்கும். இதனால்
தனியார் நிறுவனங்கள் கூட பஸ்சினுள் விளம்பரம் செய்வதில் ஆர்வம்
காட்டுகின்றனர்.
பெரும்பாலான அரசு போக்குவரத்து கழக பஸ்களில் டிரைவரின்
இருக்கைக்கு பின்னால் திருக்குறள் பொறிக்கப்பட்டிருக்கும்.
சில பஸ்களில் திருக்குறளை மறைத்து விளம்பரங்கள் தொங்குவது பயணிகள்
மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு பஸ்களின் ஓரத்தில்
தமிழர்களின் அடையாளமான அரசின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். கோவையில்
செம்மொழி மாநாடு நடப்பதற்கு முன்னால் அரசின் சின்னத்தை மறைத்து செம்மொழி
மாநாட்டுக்கான சின்னம் பொறிக்கப்பட்டது. இம்மாநாடு முடிந்து பல மாதங்கள்
ஆகியும் காணாமல் போன அரசு சின்னம் பஸ்களில் பொறிக்கப்படவில்லை. இது பயணிகள்
மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்து கழக
பஸ்களில் பயணிகளுக்கு தரப்படும் டிக்கெட்டுகளிலும் அரசு சின்னம்
மாயமாகியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு தமிழக
கலாச்சார நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழக பஸ்களில் மாயமான அரசு
சின்னத்தை பொறிக்கவும், டிக்கெட்டுகளில் மாயமான அரசு சின்னத்தை மீண்டும்
டிக்கெட்டுகளில் பதித்து வழங்க வேண்டுமெனவும் பயணிகள் விரும்புகின்றனர்.