/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
லாரி டிரைவர் கொலை வழக்கு மனைவி, நண்பரிடம் விசாரணை
/
லாரி டிரைவர் கொலை வழக்கு மனைவி, நண்பரிடம் விசாரணை
ADDED : நவ 02, 2025 02:13 AM
நாகர்கோவில்: தக்கலை அருகே லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி மற்றும் நண்பரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே பிரம்மபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ், 36; லாரி டிரைவர். இவரது மனைவி பவித்ரா. 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். குழந்தைகள் இல்லை.
சில நாட்களுக்கு முன் திருவிடைக்கோடை சேர்ந்த நண்பர்கள் ரமேஷ், 28, விமல், 26, ஆகியோருடன் வெளியே சென்ற கிருஷ்ணதாஸ், மாம்பழத்துறை ஆறு அணை அருகே கொற்றிப்பாறை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்.
இதுதொடர்பாக, இரணியல் போலீசில், கிருஷ்ணதாசின் தாய் குமாரி அளித்த புகார்:
என் மகன் கிருஷ்ணதாஸ் வேலைக்காக வெளியூர் சென்றால், 20 நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார். அப்போது, ரமேஷ் மகனின் வீட்டுக்கு வந்தபோது, பவித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக என் மகனுக்கும், பவித்ராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மகனை ரமேஷ், விமல் ஆகியோர் போனில் பேசி வெளியே அழைத்து சென்றனர். பின்னர் அவரை கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார். ரமேஷ் மற்றும் பவித்ராவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

