ADDED : ஆக 06, 2024 01:49 AM
கரூர்,
அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று குறைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,199 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1,150 கன அடியாக குறைந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு, 775 கன அடியில் இருந்து, 300 கன அடியாக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 89.05 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 82 ஆயிரத்து, 831 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 61 ஆயிரத்து, 558 கன அடியாக சரிந்தது.
அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 60 ஆயிரத்து, 38 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 700 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 189 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.25 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.