/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணை நீர்மட்டம் 10 நாளில் 7 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
அமராவதி அணை நீர்மட்டம் 10 நாளில் 7 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணை நீர்மட்டம் 10 நாளில் 7 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணை நீர்மட்டம் 10 நாளில் 7 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 21, 2024 07:35 AM
கரூர்: அமராவதி அணை நீர்மட்டம், 10 நாளில், ஏழு அடி வரை உயர்ந்துள்ளது. இதனால், நெல் பயிரிட்ட விவசாயிகள், மகிழ்ச்சியுடன் பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணை நீர்மட்டம், 90 அடி. கேரளா மாநிலம், மேற்கு தொடர்ச்சி மலை மூணாறு மலைப்பகுதிகள், அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ளது. கடந்த, 10 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அமராவதி அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த, 10ல் அணை நீர்மட்டம், 77.79 அடியாக இருந்தது. பருவமழை பெய்து வருவதால், 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 85.21 அடியாக உயர்ந்தது. கடந்த, 10 நாளில், 7.42 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வினாடிக்கு அணைக்கு, 452 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், ஆற்றில் வினாடிக்கு, 300 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில், 158 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் உள்ள, 18 பழைய வாய்க்கால்கள் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 25,248 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வரும், நடப்பு மாதம் முதல் கட்டமாக குடிநீருக்கும், பின் சம்பா சாகுபடிக்காக, அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,957 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 288 கன அடியாக குறைந்தது. ஆனால், கதவணையில் இருந்து, 428 கன அடி தண்ணீர் டெல்டா பாசன பகுதிக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால் உள்ளிட்ட, நான்கு கிளை வாய்க்காலில், 1,320 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையில், 21.64 அடி தண்ணீர் இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தற்காலிகமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.