/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பண்டிகை சீசன் முடிந்ததால் வாழைத்தாருக்கு விலை குறைவு
/
பண்டிகை சீசன் முடிந்ததால் வாழைத்தாருக்கு விலை குறைவு
பண்டிகை சீசன் முடிந்ததால் வாழைத்தாருக்கு விலை குறைவு
பண்டிகை சீசன் முடிந்ததால் வாழைத்தாருக்கு விலை குறைவு
ADDED : அக் 25, 2025 01:28 AM
கரூர், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதால், வாழைத்தாருக்கு திடீரென விலை குறைவு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகைமலை, கடவூர், வேலாயுதம்பாளையம், லாலாப்பேட்டை, வாங்கல், நெரூர், மணவாசி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு தேவைக்கு போக மீதி, சிப்ஸ் தயாரிக்க வெளிமாநிலங்களுக்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
சமீபத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகைகள், திருமண சீசன் உள்ளிட்ட காரணங்களால், வாழைத்தாருக்கு அதிக விலை கிடைத்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும், வாழைப்பழத்தை உணவாக பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்தனர். இதனால், வாழைத்தாருக்கு தேவை குறைந்தது. இதனால், ஆயுத பூஜை பண்டிகையின் போது, 800 ரூபாய் வரை விலை போன பூவன் வாழைத்தார் நேற்று, 400 ரூபாயாக விலை குறைந்தது. அதே போல், ரஸ்தாளி, கற்பூர வள்ளி, மொந்தன் உள்ளிட்ட வாழைத்தார்களும் சராசரியாக, 100 முதல், 200 ரூபாய் வரை விலை குறைந்தது.
இந்நிலையில் வரும், 27ல் கந்த சஷ்டி விழாவும், தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளது. மேலும், விரைவில் கார்த்திகை மாதம் துவங்குவதால், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து கொண்டு விரதத்தை துவக்குவர். அப்போது, வாழைப்பழத்துக்கு தேவை அதிகரிக்கும் என்பதால், வாழைத்தாருக்கு மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, கரூரை சேர்ந்த வாழைத்தார் வியாபாரிகள் தெரிவித்தனர்.

