/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானியத்தில் தறி கொள்முதல் விண்ணப்பிக்க அழைப்பு
/
மானியத்தில் தறி கொள்முதல் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 30, 2025 05:11 AM
கரூர்: 'மானிய விலையில் தறிகளை கொள்முதல் செய்ய விண்ணப்பிக்கலாம்' என, கரூர், கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மூன்று ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்த மூலதன மானியம், விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தில் வழங்கப்பட உள்ளது.
ஆண்டு தோறும், 3,000 விசைத்தறிகளை நவீனமாக்கும் வகையில், 30 கோடி ரூபாய் நிதியும், புதிய நாடா இல்லா ரேபியர் தறிகள் அல்லது பழைய குறைந்த வேக ரேபியர் தறிகளுக்கு மாற்றாக புது ரேபியர் தறிகள் கொள்முதல் செய்திட, 15 கோடி ரூபாய், பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்
பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவ, 5 கோடி ரூபாய் என மொத்தம், 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட அல்லது புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திட அல்லது பொது சேவை மையம் நிறுவிட விருப்பமுள்ளவர்கள், https://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 121/5, திட்டச்சாலை, வி.வி.ஜி நகர், வெங்கமேடு, கரூர் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சரக கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.

