/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் 23,277 ஏக்கரில் சம்பா சாகுபடி
/
மாவட்டத்தில் 23,277 ஏக்கரில் சம்பா சாகுபடி
ADDED : நவ 16, 2025 02:20 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், சம்பா சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இதுவரை, 23,277 ஏக்கர் நெல் சாகுபடி நடந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடக்கிறது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்தாலும், இங்கு பாசனத்திற்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலும் காவிரி ஆற்று பாசனம், கிணற்று பாசனத்தை நம்பியே சம்பா சாகுபடி நடக்கிறது. பல ஆண்டுகளாக, உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காத காரணமாக சில விவசாசயிகள் மாற்று பயிர் சாகுபடிக்கு சென்று விட்டனர். இதனால் சம்பா சாகுபடி பரப்பு, மெல்ல மெல்ல சரிந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், இலக்கை மிஞ்சும் அளவில் சம்பா சாகுபடி நடக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில், காவிரி ஆற்று நீரை மட்டுமே நம்பி சாகுபடி நடப்பதால், 90 சதவீதம் சம்பா பருவ காலங்களில் நெல் பயிரிடப்படுகிறது. கோடை மழையில், 10 சதவீதம் நெல் சாகுபடி நடக்கும். இந்தாண்டு ஜூன், 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து, சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, தான்தோன்றிமலை ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடி நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு, 36,324 ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்தது. நடப்பு ஆண்டு இதுவரை, 23,277 ஏக்கரில் சாகுபடி நடந்துள்ளது. இந்தாண்டு, 35,830 ஏக்கர் என்ற அரசின் இலக்கை விட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

