ADDED : நவ 10, 2026 04:12 AM
கரூர்; புன்னம்சத்திரம் கடை வீதியில், மழைநீர் வடிகால்கள் அடைபட்டுள்ளதால், லேசான மழைக்கே சாலையில் கழிவுநீருடன், மழைநீர் பெருக்கெடுத்து ஓடி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புன்னம்
சத்திரம் கடைவீதியில், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், மின்வாரிய அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு, பொது சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் தினந்தோறும் நுாற்றுக்கணக்கானோர், தங்களின் அன்றாட தேவைகளுக்காகவும், விவசாய பணிகளுக்காகவும் இங்கு வந்து செல்கின்றனர்.
மேலும் கரூர், கொடுமுடி, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ் நிறுத்தமும் இங்கு அமைந்துள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பயணிகள் எந்நேரமும் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. சாலையோர கடைகள் மற்றும் ஆங்காங்கே ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளாலும், இங்குள்ள வடிகால்கள் மண், குப்பை நிறைந்து மூடப்பட்டுவிட்டன. இதனால் மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. புன்னம்சத்திரம் கடைவீதியில் உள்ள, மழைநீர் வடிகால் தண்ணீர் தடையின்றி செல்ல ஏதுவாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
